இந்த IOE Status (சீர்மிகு பல்கலை என்ற அந்தஸ்து) குறித்து என்னால் இயன்ற அளவுக்கு விளக்கமாக ஒரு பதிவை எழுதலாம் என்று நினைத்து எழுதி முடித்த அக்டோபர் 16ஆம் நாள் அன்று , உயர்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பழகன் அவர்கள் இந்த பேட்டியைக் கொடுக்கிறார்.
“உயர்
சிறப்பு தகுதி அறிவிக்கப்பட்டால் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நீண்ட நெடிய நாட்களாகப்
போராடி கொண்டுவந்த 69 சதவீத இட ஒதுக்கீடு கேள்விக்குறியாக மாறிவிடும். மாணவர்கள் சேர்க்கையின்போது
நுழைவுத் தேர்வு அறிவிக்கப்படும், கட்டணமும் கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்படும் நிலை
உருவாக்கப்படும்.
அரசுக்கு
இந்தப் பல்கலைக்கழகத்தை காலாகாலத்திற்கும் காக்கவேண்டிய எண்ணம் உள்ளது. ஆகவே, இந்த
நிகழ்வுகள் இதை மாற்றி அமைக்கும் நிலையில் உள்ள பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு
உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்பது அரசின் எண்ணம். அதே நேரம் உயர் சிறப்பு தகுதி
இருந்தால் என்ன நிலை இருக்குமோ அத்தனை வசதிகளும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும்
வகையிலும், மாணவர்களின் ஆராய்ச்சிப் படிப்புக்கும் தேவையான அத்தனை வசதிகளும் செய்து
தரப்படும்.”
என்ன
காரணங்களுக்காக இதை சிலர் எதிர்த்தார்களோ , எதற்காக சிலர் பதறினார்களோ அந்த காரணங்களையே
குறிப்பிட்டு இதனை ஏற்க மாட்டோம் என அமைச்சர் சொன்னது உள்ளபடியே மகிழ்ச்சி. ஆனால் மனுஷ்யப்புத்திரனின்
கவிதையைப் போல இந்த அறிவிப்பின் இறுதியிலும் நேரம், நாள், மன நிலை என்பதையும் சேர்த்துப் படித்துக்
கொள்வது காலத்தின் கட்டாயம். விடிந்து எழுந்து, ஆடு திருடு போகவே இல்லை, திருடு போனதாய்
கனவு கண்டேன் என தலையைச் சொறிந்து விட்டு நகர்ந்து விடுவார்களோ என்ற பயம் இன்னும் இருந்துக்
கொண்டு தான் இருக்கிறது எனக்கு. நம் அரசின் Track Record அப்படி.
சரி,
இப்போதைக்கு இது தான் அரசின் கொள்கை முடிவு என்பது தெளிவானதால் நிம்மதி கொள்ளலாம்.
எப்போதெல்லாம் கல்வி குறித்து மாற்றங்கள் முன்வைக்க படுகிறதோ அப்போது யாவரும் வைக்கும்
பொதுப்படையான வாதம் ‘கல்வியின் தரம் குறைந்து விட்டது’.
சரி
அது ஒரு வகையில் ஒத்துக்கொள்ளலாம் என்று வைத்துக்கொண்டால் அதற்கு அடுத்து வைக்கும் வாதம் மாணவ மாணவியரின் தரம்
குறைந்து விட்டது. எந்த ஒரு காலத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாத வாதம் என்றால் அது இதுவாக
தான் இருக்க முடியும்.
எப்போதுமே
இந்த கால தலைமுறை கடந்த தலைமுறையை விட அறிவார்ந்ததாக இருக்கும். தொழில்நுட்ப, அறிவியல்
முன்னேற்றங்களினாலோ, பெற்றோர் மற்றும் சுற்றத்தார் இருந்து கற்றுக்கொள்வதானிலோ, மரபணு
மாற்றங்களினாலோ அது இயற்கையாகவே அமையும். அதே போல, இந்த தலைமுறையைவிட அடுத்த தலைமுறை
இன்னும் அறிவார்ந்ததாக இருக்கும்.
கல்வியின்
தரம் குறைந்து விட்டதா என்றால் ஆம் குறைந்து விட்டது ஆனால், அது முழுக்க முழுக்க மாணவ மாணவியரின் அறிவு
சார்ந்தது என அவர்கள் பக்கம் பந்தைத் திருப்பிவிட்டு ஒரு குறிப்பிட்ட அறிவு சார் கூட்டம்
சுய இன்பம் கொண்டு கல்வியை திட்டமிட்ட வியாபாரமாக மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.
இந்த
முறை அரசு பள்ளியில் படித்து NEETல் முதல் இடம் வந்த மாணவன் ஜீவித் பன்னிரண்டாம் வகுப்பு
தேர்வில் வாங்கிய மதிப்பெண் 548/600. அந்த வருடம் நடந்த NEET தேர்வில் வாங்கிய மதிப்பெண்
வெறும் 193. இந்த சனாதன ‘அறிவு சார்’ கூட்டம் சிந்தனைப்படி ஜீவித் ‘மருத்துவர்’ ஆக தகுதி ஆனவன்
இல்லை. ஏன் என்றால் அவன் வெறும் மனப்பாடம் செய்து பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்
அவ்வளவு மதிப்பெண் வாங்கியுள்ளான். ஆனால் NEET தேர்வில் வெற்றி பெறும் அளவுக்கு அவனுக்கு
அறிவு இல்லை.
அதே
ஜீவித் இந்த ஆண்டு NEET தேர்வில் வாங்கிய மதிப்பெண் 664. 3 லட்சம் பணமும், அவனுக்கு ஒரு வருடத்திற்க்கு ஆகும்
செலவை சில நல்ல உள்ளங்கள் ஏற்றுக்கொண்டதால் இது சாத்தியம் ஆகி விட்டது.
ஜீவித்
போல திறமை இருந்து 3 லட்சம் பணமும், அவனுக்கு ஆகும் செலவை ஏற்றுக்கொள்ள
யாரும் முன் வராத போது அரசு பள்ளி மாணவனுக்கு மருத்துவம் என்பது நவீன தீண்டாமை. சனாதனத்தைத்
தூக்கிப்பிடிக்கும் மெத்த படித்த அறிவாளிகளுக்கு புரியும்படி ஆங்கிலத்தில் சொல்லப்போனால்
NEET is an anti-poor, anti-social equality , anti-reservation, anti-public health
care and pro capitalism.
நிற்க,
ஒரு
தொழிற்கூடத்தில் இருந்து ஆண்டு தோறும் நல்ல தரமான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு
கொண்டிருக்கிறது. அதற்கு தேவையான மூலப் பொருட்கள் ஒரே இடத்தில் இருந்து ஒரே மாதிரியாக
பெறப்படுகிறது.
மூலப்பொருட்களைக்
கொண்டு அதனை உற்பத்தி செய்யும் தொழிற்கூடம் இப்பொதெல்லாம் தரமான பொருட்களை கொடுக்கவில்லை
என்றால் ஆய்வு செய்ய வேண்டியது தொழில்கூடமே தவிர மூலப்பொருள் அல்ல.
வெளிவரும்
Productன் முழு தரத்தையும் சோதித்து இது தரமான பொருள் என சான்று அளிக்கும் தொழிற்கூடத்தை
தான் கேள்வி கேட்க வேண்டும்.
மூலப்
பொருள் வெறும் மண் மட்டுமே. 8 செமஸ்டர், 64 பாடங்கள், 12 பயிற்சிக்கூடங்கள் என அனைத்திலும்
தேர்ச்சி பெற்றால் மட்டுமே அங்கு அவனுக்கோ/அவளுக்கோ சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆக
கேள்வி கேட்க வேண்டியது, பள்ளிப்படிப்பையோ இல்லை மாணவர்களையோ அல்ல.
"வெறும் கணக்கு, இயற்பியல், வேதியியல்ல மட்டும் 200 வாங்கிடு, 'அண்ணா யுனிவர்சிட்டி'யில சீட்டு கிடைச்சுரும். அப்பறம் உன் லைப் settled"என்று ஒவ்வொரு நாளும் ஆசிரியர்கள் உற்சாகப்படுத்த அந்த சிவந்த கட்டிடத்தை பார்க்காமலே அதன் மீது காதல் கொண்டு முதல் நாள் கவுன்சிலிங்க் போது உள்ளே நுழைகையில் பிரமித்து போன அரசுப்பள்ளி மாணவன் நான்.
எல்லார்க்கும் தெரிந்தது போல நான்கு வளாகங்களை உள்ளடக்கிய சிவந்த கட்டிடத்திற்கு நன்றி சொல்ல உங்களை விட எனக்கு பல ஆயிரம் காரணங்கள் உண்டு. கிண்டி பொறியியல் வளாகம் தான் எனக்கு எல்லாமே கொடுத்தது. ஆம் எல்லாமும் தான்!.
"ஏழை மாணவர்களுக்காக கல்வித் தரத்தை குறைக்க கூடாது. ஏழை மாணவர்கள் படிப்பதற்காக தனியாக கல்லூரிகள் உருவாக்கப்பட வேண்டுமே தவிர, அண்ணா பல்கலைக்கு கிடைக்கவுள்ள சிறப்பு அந்தஸ்தை நிராகரிக்கக் கூடாது."
CEGயின் தரம் என்பதாக இதனை கொஞ்சம் திருத்தினால் இன்னும் சிறிது எளிமையாக தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும். இந்த கருத்துக்களை CEGயின் தரத்தைப் பாதிக்கும் அல்லது கவனத்தில் கொள்ள வேண்டிய அல்லது நடவடிக்கை எடுக்க வேண்டிய மிக முக்கியமான அம்சங்களாக அல்லது ஒரு ஆற்றாமை பதிவாக எடுத்துக்கொள்ள வேண்டியது படிப்பவரின் சுயம் சார்ந்தது.
ஏன்
என்றால், கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடும் போன்ற அரிய வகை யோசனைகளை மட்டுமே அதுவும் அவர்கள்
ஒரு குறிப்பிட்ட சமூகத்தினராகவோ அல்லது முன்னாள் துணைவேந்தர்களாகவோ அல்லது அதிகார அமைப்பிற்க்கு
நெருக்கமானவர்களாகவோ அல்லது கல்லூரியின் அதிகார அமைப்பில் அங்கமாகவோ இருந்தால் மட்டுமே நிர்வாகம் கவனத்தில் கொள்ளும்.
இன்னொன்று
இதை இங்கு பேச எனக்கு இரண்டு சுதந்திரம் இருக்கிறது. கல்லூரியில் இப்போது படிக்கும்
மாணவன் நான் இல்லை, என்னுடைய CGPA 9.5 மேல் இல்லை. இரண்டாவது கல்லூரியின் முன்னாள் மாணவர்
அமைப்பு நடத்தும் FB Groupல் நான் உறுப்பினர் இல்லை, அங்கு இதனை எழுதவில்லை. இந்திய அரசாங்கம் வழங்கிய எழுத்து, பேச்சு உரிமைகளை
விட இது இரண்டும் முக்கியம் CEGயைப் பற்றி பேசவும் எழுதவும்.
மாணவர்
அமைப்பு:
மாணவர் அமைப்பு என்று ஒன்றை வலுப்பெறச் செய்து அங்கே அரசியல் அறிவை பாடம் புகுத்தி 50 ஆண்டு தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு வித்திட்ட பிதாமகன் அண்ணாவின் பெயர் கொண்ட தமிழகத்தின் முதன்மையான கல்லூரியில் மாணவர் அமைப்பு என்ற ஒன்றை காலி செய்தது நிர்வாகத்தின் பெரும்சாதனை.
5 ஆண்டுகளுக்கு முன் இருந்த SAAS அமைப்பை இரண்டாகப் பிரித்து அதன் ஆற்றலை மட்டுப்படுத்தி குறிப்பிட்ட பேராசிரியர்களின் கீழ் மட்டுமே எல்லா முடிவுகளும் எடுக்க செய்ததன் விளைவு SAAS அமைப்புக்கு பின் நடத்தப்பட்ட AGNI, TECHOFES அதற்கான எல்லா சிறப்புகளையும் இழந்து ஒரு சாதராண கல்லூரியின் ஆண்டு விழா போல் ஆனது.
CTF என்ற அமைப்பின் மாணவர் தேர்வில் தலையிட்டு வெறும் 9 pointer மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்று மாற்றி அதன் தரமும் ஒரு சாதராண கல்லூரியின் symposium போல் ஆனது.
வளாகத்தில் இருக்கும் எல்லா குழுக்களும்/சின்ன சின்ன மாணவ அமைப்புகளும், NSS/YRC குழுக்களும் அதன் நோக்கத்தில் இருந்து விலகி கொடுக்கப்படும் கட்டளைகளை மட்டும் நிறைவேற்றும் பொம்மையாகி விட்டது. மாணவர்கள் சொல்வதை பொறுமையுடன் காது கொடுத்து கேட்க கூட நேரம் இல்லாத பேராசிரியர்கள் தலைமையில் இந்த மாணவர் அமைப்புகள் செயல்படுவது தான் இதன் சிறப்பம்சம்.
கல்லூரியின் அனைத்து இடங்களிலும் உள்ள Student Representation என்பது வெறும் 9 pointers மட்டுமே. நன்றாக படிக்கும், படிக்க சிரமம் இல்லாத மாணவக்கூட்டத்தை மட்டுமே முன்னிலைப்படுத்தி குறைவான மதிப்பெண் வாங்குபவரின் குரல் கூட எங்கும் கசிவதில்லை. உனக்கு படிப்பதில் என்ன பிரச்சனை என்று யாரிடம் கேட்க வேண்டும். யாரிடம் குறைகளை கேட்க வேண்டும், கல்லூரியிடம் இருந்து என்ன எதிர்ப்பார்கிறோம் என்பதைக் கூற கூட இங்கு மாணவர் அமைப்பு என்று ஒன்று இல்லை,
தனியாக குரலை உயர்த்தும் எல்லா மாணவர்களின் தேர்வு முடிவும் ஒரே மாதிரியாக வரும். அது அந்த குரல் எழுப்பும் மாணவனை மட்டும் வெகு எதைச்சையாக குறி பார்க்கும்.
முன்னாள்
மாணவர்கள் சங்கம்:
முன்னாள் மாணவர்கள் சங்கம் எத்தனையோ நல்ல காரியங்களை செய்கிறது. கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் கட்டமுடியாத மாணவ மாணவியருக்கு நிதி திரட்டிக் கொடுக்கிறது. ஆண்டுதோறும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை துறைதோறும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கிறது, முன்னாள் மாணவர்களை அழைத்து வந்து வேலைவாய்ப்பு கொடுத்த பயங்களைப் போக்க முற்படுகிறது ஆனால் மிக முக்கியமான பிரச்சனைகளில் மிக்சர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறது.
மாணவர்கள் நலம் சார்ந்து பேச வேண்டிய எந்த பிரச்சனைகளிலும், கல்லூரி பக்கம் நின்று பேசுகிறது இல்லை மௌனமாக வேடிக்கைப் பார்க்கிறது. அநீதி நடக்கும் போது மௌனமாக இருப்பது கூட அநீதிக்குத் துணைப் போவது தான்.
IOE Status குறித்து மிக தீவிரமாக தமிழ்நாடு எங்கும் பேசிக்கொண்டு இருக்க அதன் FB க்ரூப்போ Big Boss சீசன் 4ன் போட்டியாளர் ரம்யா நம் கல்லூரி தான் என பெருமையடித்துக் கொண்டு இருந்தது. IOE குறித்து இங்கு எதுவுமே பேசக்கூடாது என்று வெளிப்படையாகவே பதிவிட்டது.
மாணவர்கள் கல்லூரி குறித்து எழுப்பும் பிரச்சனைகளை மிக சுலபமாக தீர்த்துவிடும் திறமையானவர்கள் அதன் உறுப்பினர்கள். பிரச்சனை எழுப்பும் நபரை அந்த க்ரூப்பில் இருந்தும், அந்த பதிவை நீக்கியும் பிரச்சனைகளை தீர்த்து விடுவார்கள்.
கடந்த ஆண்டுகளில் கல்விக்கட்டணம், விடுதிக்கட்டணம் உயர்ந்த போது பெயரளவுக்கு கூட அதனைக் கண்டிக்காத அமைப்பாக இருந்ததை விட நல்ல உதாரணம் எனக்கு இப்போதைக்கு தோன்றவில்லை.
CEG Branding என்பது தான் நோக்கமாக இருந்தால் எல்லா பக்கம் இருந்து வரும் விமர்சனங்களை கேட்கும் பொறுப்பும், மாணவர் நலன் சார்ந்து மட்டுமே பேச வேண்டிய கடமையும் தங்களுக்கு இருக்கா என சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
பேராசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்கள்
இது எல்லாவற்றிலும் மேலாக மாணவர்களை அவர்கள் உருவம், நிறம், பாலினம், பின்புலம், மதிப்பெண் கொண்டு சிறுமைப்படுத்தி விருப்பமானவர்களுடன் மட்டும் தோழமையுடன் பழகும் பேராசிரியர்களை நான் அறிவேன்.
நிர்வாகம்
ஒரு கல்லூரியின் தரம் என்பது அங்கு இருக்கும் அறிவின் தரம் என முந்தைய பத்தியில் கூறினேன். அந்த அறிவின் தரத்தை எப்படி பரிசோதிப்பது. ஒன்று கல்லூரியில் இருந்து வெளிவரும் ஆய்வுக்கட்டுரைகள், பிராஜெக்ட்ஸ் (Projects) , இரண்டாவது அதனை தேடிவரும் பல்வேறு நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள்.இந்த இரண்டுக்கும் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பது கல்லூரிக்கே வெளிச்சம்.
CSE/IT/ECE/MECH தவிர மற்ற இதர துறைகளில் Core எனப்படும் அந்த துறைக்கே உண்டான நிறுவனங்களின் மூலம் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கூறும் அந்த முக்கியத்துவத்தை.
ஆண்டுதோறும் வரும் CTS/TCS/Wipro/Infosys/IBM நிறுவனங்களில் Bulk முறையில் 300 - 400 மாணவர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்புகளை கிடைக்கப்பெற செய்து கணக்கைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
6 Comments
Beautiful article covering all the issues of 'Quality' in Anna University.. Rightly said, without focusing on these issues, focusing on students coming from marginalized background is 'Social Boycott'..
ReplyDeleteசிறப்பான கட்டுரை அண்ணா. 👌👌👌🔥
ReplyDeleteகல்லூரி நிர்வாகம் தரமாக செயல்பட்டால், கல்வியின் தரம் உண்மையிலேயே முன்னேற்றம் அடைந்து விடும் என்ற பயத்தில் மாணவர்களின் மீது பழி போடுவது இவர்களுக்குப் புதிதல்ல! சிறந்த பதிவு! The voice of every CEGian!
ReplyDeleteEn manathai ezhuthi ulleergal...super anna :-)
ReplyDeleteGreat article!!
ReplyDeleteVery well written!
ReplyDeleteNobody knows in what way the quality of CEG, or even other AU departments, have declined when compared to the entrance-exam era. It's just an popular narrative built without any hard facts by those gurus and samys!