யாவரும் கேளிர்


'எப்போ அடுத்த வேலைக்கு போக போற?'
'எப்போ கல்யாணம்?'
'எப்போ வீட்ல அடுத்த விசேஷம் ?'
'எப்போ சொந்த வீடு கட்டப் போற?'
'எப்போ பைக் வாங்க போற?'
'எப்போ ஊருக்கு வர போற?'
'எப்போ எங்கள பாக்க வர போற?'
'எப்போ மேல படிக்க போற?'

இந்த கேள்விகளை எதிர்கொண்டே நாட்கள் நகர்கிறது.

'சீக்கிரமாக', என்ற சூசக பதிலையோ,
கனத்த மௌனத்தையோ,
பொய் புன்னகையையோ,
இல்லை, இந்த நாள் இந்த நேரம் 
என்ற நிலைத்தகவலையோ 
எதிர்பார்க்கிறார்கள்.

சரி, பதில் கூறிவிட்டால் முடிந்துவிடுமா என்றால்,
அவர்கள் அடுத்த கேள்விக்கு நகர்ந்து விடுவார்கள். 
தனக்கு யாரும் கேட்காத-  இல்லை ,
தன்னை இதுநாள் வரை கேட்டு 
வார்த்தெடுக்கப்பட்ட கேள்விகளைக் கேட்பது
மட்டுமே அவர்களது  நோக்கம்.

இதையெல்லாம் ஏன் கேட்கிறார்கள் 
என்றென்பது என் கோவம்
இதற்குக்கூட, ஏன் பதில் கூற
மறுக்கிறான் என்பது 
அவர்களுக்கு என் மீது உள்ள கோவம்.

கொண்ட குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்தி
சுக போக வாழ்வை துறந்து
தேர்வில் வெற்றி பெறுவதே இச்சிறையில் 
இருந்து விடுதலை என்பவனுக்கு
'எப்போ நாலு காசு சம்பாதிக்க போற?'  என்ற கேள்விக்கு
என்ன தான் பதில் சொல்ல முடியும்.

உனக்கு நான் வேண்டியவன், 
உனக்கு நான் நெருக்கமானவன்,
உன் நலனின் எனக்கு அக்கறை உண்டு,
உனக்கு நான் உறவு,
உனக்கு என்னிடம் பரிகாரம் உண்டு,
உனக்கு என்னிடம்  நன்றிக்கடன் உண்டு,
உன் சுக துக்கங்களில் எனக்கு பங்கு உண்டு,
என்பதன் அடையாளங்களாகவே அவர்கள் கேட்கிறார்கள்.

சொல்லப் போனால் , 'எப்போ' என்ற கேள்வியை 
மட்டும் தான் இந்த சமூகம் 
இத்தனை யுகங்களாக பழக்கியுள்ளது.
அயலானிடமோ, நண்பனிடமோ, 
உற்றார் உறவினரிடமோ
பேசுபொருளாக 'எப்போ' 
என்ற கேள்விதான் பிரதானம்,
எதிர்காலம் கணிக்கும் ஆருடம்.

'யாவரும் கேளிர்' என்பதை மிகத் தவறாக 
புரிந்து கொண்டது நம் தலைமுறை தான்
என்றார் விமானத்தில் 
பயணித்த சக பயணி ஒருவர்.

இதோடு முடிவதல்ல வாழ்க்கை
இன்னும் இவையெல்லாம் இருக்கு
உனக்கு நினைவுப்படுத்த, 
உன் காதில் போட்டுவிட
'எப்போ' என்கிறோம், 
என்றார் உறவினர் ஒருவர். 

இந்த கேள்விகள் இல்லாமல் பேச முடியுமா?
பரிசோதித்துப் பார்த்தேன்.

'எப்போ ரஜினி அரசியலுக்கு வருவார்?'
'எப்போ சிம்பு சூட்டிங்க் செல்வார்?'
'எப்போ மோகமுள் படிக்க ஆரம்பிக்க?'
'எப்போ தோனி மீண்டும் விளையாட வருவார்?'
'எப்போ வடகிழக்கு இந்தியா செல்ல?'
'எப்போ பெட்ரோல் விலை குறையும்?'
என அரசியல்,  சினிமா,  இலக்கியம், 
விளையாட்டு,  அலுவலகம், 
பயணம், பங்குசந்தை,
விலைவாசி எங்கெனினும் அது
'எப்போ' என்ற கேள்வியை 
நோக்கியே நகர்கிறது.

உண்மையைச் சொன்னால்,
நான் 'எப்போ' என்ற கேள்வியை 
கேட்க யோசிப்பதே இல்லை.
என்னிடம் கேட்கப்படும் 'எப்போ' என்ற 
கேள்விகளுக்கு மட்டும் தான் யோசிக்கிறேன்.

யார் கேட்கிறார்கள் என்று யோசிக்கிறேன்.
மடை திறந்த ஆற்று நீர் போல
கொட்டுவதும்
கூடுதல் பசை போட்டு ஒழுக விடாமல்
தடுப்பதும் 
கேட்பவர் யாரென்று பார்த்து,
அவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு
எனக்கும் அவர்களுக்கும் என்ன உறவு 
என்பதையே யோசிக்கிறேன்.

கண்ணீரைப் போல
சிரிப்பைப் போல
கோவத்தைப் போல
காமத்தைப் போல
இந்த கேள்விகளும் விருப்பமானவர்களிடம்
இருந்து வருவதையே எதிர்பார்க்கிறேன்.

'மனிதன் வெறும் சதைபிண்டம்' என்றான்
மருத்துவ நண்பன் ஒருவன்,
உடன்பாடில்லை என்றேன்.
'உணர்வுகள் தான் மனிதன்' 
என்பது என் கோட்பாடு என்றேன். 
சக மனிதர்களிடம் இருந்து கிடைக்கப்பெறும்
மாறுபட்ட உணர்வுகள் தான்
மனிதனை இன்னும் மனிதனாக 
இயக்கிக் கொண்டி இருக்கிறது
என்று அந்த வாதத்தை நிறைவு செய்தேன்.

'காலங்காலத்துல கல்யாணம் பண்ணிடு
இல்லனா என் நிலைமை தான் உனக்கும்'

'வீட்ல கஷ்டம் மேலும் கொடுக்காம 
உன் செலவ நீ பாத்துக்கோ'

'இந்த வருமானம் பத்தாது, 
இன்னும் இருந்தா பின்னாடி உதவும்'

என்ற உணர்வுகளின் வெளிப்பாடு 
தான் இந்த எல்லா கேள்விகளின்
அடிநாதமாக இருந்து இருக்கிறது.

கேள்வி கேட்க சொல்லிக் 
கொடுத்த சமூகம்
'திறனறிந்து சொல்லுக சொல்லை'  
என்ற குறளைப் படி என்று
சொல்லிக் கொடுக்க மறந்ததன் 
பக்க விளைவு மட்டும் தான் என்னுடைய 
இந்த கோபத்திற்க்கு காரணம்
என்ற புத்தி வந்தது எனக்கு.

இப்போதெல்லாம் எனக்கு, 'எப்போ'
என்று யார் கேள்வி கேட்டாலும் 
கோவமே வருவது இல்லை.

'எப்போ', இந்த 'எப்போ' என்ற கேள்வி கேட்பதை 
நிறுத்த போகிறீர்கள் என்று மட்டும் 
சிரித்துக் கொண்டே கேட்கிறேன் -  ஆனால் 
அவர்களைப் போல் அல்லாமல்
இந்த கேள்விக்கு அவர்களிடம் 
நான் பதிலை எதிர்பார்ப்பது இல்லை.






0 Comments