தூக்கம் வராத இரவுகள் உங்களுக்கு உண்டா,
பேச்சுத் துணைக்கு ஆள் இல்லாமல் காற்றாடியை
மட்டும் வெறுமையாக பார்த்து தூங்க
முடியாமல் கழித்த இரவுகள் உண்டா,
பசியோடு படுக்கையில் கிடந்து தூங்க
முடியாமல் கழித்த இரவுகள் உண்டா,
காய்ச்சல் வந்து வறட்டு இருமலோடு உமிழ்நீர்
தலையணையை நனைத்துக் கொண்டு
தூங்காமல் கழித்த இரவுகள் உண்டா,
கைக்கு கிடைத்த வேலை ஒன்று கடைசி
நேரத்தில் இல்லை என்ற செய்தியை கேட்டு
தூங்காமல் கழித்த இரவுகள் உண்டா,
இது அத்தணையும் ஒரே இரவில்
உங்களுக்கு நடந்தது உண்டா,
அப்படிப்பட்ட ஒரு பின்னிரவின் வலி
உங்களுக்கு தெரியாமலே போகட்டும்...
சில கனவுகள் பயமுறுத்தும்
சில கனவுகள் சிரிக்க வைக்கும்
சில கனவுகள் அழ வைக்கும்
சில உங்களை காதலிக்க வைக்கும்
சில கனவுகள் காமத்திற்காக
எதாவது ஒரு கனவு உங்களை பகல் இரவு
என பாராமல் துரத்தி இருக்கிறதா ?
அந்த கனவின் வீரியம் உங்களுக்கு
தெரியாமலே போகட்டும்.
சிலர் புத்தகம் படிக்க சொல்லுவார்கள்
சிலர் பயணம் செய்ய
சிலர் வேற்று மொழி திரைக்காட்சிகளைப் பார்க்க
சிலர் சமைக்க கற்றுக்கொள்ள
சிலர் சமூக பணியாற்ற சொல்லுவார்கள்-
சோம்பலால், அதை எதுவும் செய்ய முடியாமல்,
கட்டிலில் அலைபேசி பார்த்துப் படுத்துக்கொண்டு
இருப்பது நீங்கள் தான் என்பது உங்கள்
மனசாட்சிக்கு தெரியாமலே இருக்கட்டும்..
மூன்று மணியோடு கல்லூரி முடிந்ததை
மறந்து இரவு பதினொரு மணி வரை
கணினி முன் வேலை செய்வது
நீங்கள்தான் என்ற எதார்த்தம்
உங்களுக்கு தெரியாமலே போகட்டும்
ராஜாவாக போகிறேன் என்று சொந்த ஊரை விட்டு
கிளம்பி இருக்கிறீர்களா, இனி 'தன் கூடு அடைதல்'
சாத்தியமே இல்லை, என்ற உண்மை
உங்களுக்கு தெரியாமலே போகட்டும்.
பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, பிறந்த நாள் வாழ்த்து
சொல்பவர்கள் மாறிக் கொண்டே
இருப்பார்கள் என்ற உண்மையும்;
தலை நரைத்தவன், வழுக்கை தலையன்,
தொந்தி ஆசாமி, குள்ளன், விகாரமானவன்,
அம்மாஞ்சி என எள்ளி நகையாடிய நீங்கள்,
நிலைக்கண்ணாடியில் நாள்தோறும்
உங்களின் உருவம் மாறிக்கொண்டே
இருக்கிறது என்ற விதி
உங்களுக்கு தெரியாமலே போகட்டும்.
ஒரே முகங்களுடன் நட்பு பாராட்டி
ஒட்டுண்ணியாக மாறிவிட்ட நீங்கள்
அவர்கள் இன்றி எங்கு சென்றாலும்
அந்த இடத்திருக்கு அந்நியமாக மாறப்படும்
சூழலின் வெறுமை உங்களுக்கு தெரியாமலே போகட்டும்.
தனியாக பயணிக்க, தனியாக வசிக்க,
தனியாக சமைக்க, தனியாக வாழ்தல்
அத்துணை கடினம் அல்ல
என்ற சௌகர்யம் உங்களுக்கு தெரியாமலே போகட்டும்.
காதல், காமம், நட்பு இது மூன்றுக்கும் பொருள் இன்னும்
தேடிக்கொண்டு தான் இருக்கிறீர்கள் என்ற நிலவரம்
உங்கள் ஹார்மோன்களுக்கு தெரியாமலே இருக்கட்டும்.
எதிர்பாலினத்தவரை காமம் இன்றி ரசிக்க
கற்றுக்கொள்ள வில்லை என்ற நிஜம்
உங்களுக்குள் இருக்கும் யோக்கியன் என்ற
பிம்பத்திற்கு தெரியாமலே இருக்கட்டும்.
எந்த கேள்வியும் கேக்காமல் எந்த சமயத்திலும்
உரையாடும், கேட்டவுடன் பணம் கொடுக்கும்
நட்பு வட்டம் சுருங்குவது உங்கள்
கண்களுக்கு தெரியாமலே இருக்கட்டும்
நூல்கண்டைத் துரத்தி செல்லும் பூனையை
நீங்கள் பார்க்காமல் இருக்க வேண்டுகிறேன்,
அந்த பூனையும் நீங்களும் ஒன்று தான்
என்ற உண்மை உங்களுக்கு
கடைசிவரை தெரியாமலே போகட்டும்.
சாபங்கள் எல்லாம் போதும் எதாவது வரம் தா என வினவுகிறீர்களா,
இந்த நாட்களை எல்லாம் அழகு செய்ய
உங்களுக்கு ஒரு
தன்னம்பிக்கை கீற்று வாய்க்கட்டும்.
எந்த மனித முகத்தையும் பார்க்கும்போது,
அனிச்சையாக புன்னைகைக்கும் முகம்
உங்களுக்கு வாய்க்கட்டும்.
நீங்கள் இறுகப்பிடித்து நடக்கப் பழகிய பெற்றோரின் கை,
உங்கள் கையை இறுக்கிப்பிடித்து
சாலையைக் கடக்கும் நிகழ்வு
உங்களுக்கு வாய்க்கட்டும்.
பேசுவதை நிறுத்திவிட்டு
கொஞ்சம் காது கொடுத்து
கேட்கும் பொறுமை
உங்களுக்கு வாய்க்கட்டும்.
நண்பர்கள் தங்களுடைய திருமணம்
பற்றிய செய்தியை பகிரும்போது -
மாதக்கடைசியில் எஞ்சி நிற்கும்
அம்பது ரூபாய் எண்ணி கர்வப்படும்
ஆனந்தம் உங்களுக்கு வாய்க்கட்டும்.
உங்களுடைய துன்பங்களையும்,
வேதனைகளையும், ஆசைகளையும்,
கோவங்களையும், சமூக வலைத்தளங்களில்
பதிவிட்டு அனுதாபம் தேடாத நிலை உங்களுக்கு வாய்க்கட்டும்.
எத்தனை வருடம் வேண்டும்னாலும் காத்திருப்பேன்
என்றொரு பெருங்காதல் உங்களுக்கு வாய்க்கட்டும்!
- முற்றும்

3 Comments
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteஉண்மையின் பிம்பம்
ReplyDeleteஅருமையான வரிகள்..!!
ReplyDelete