நான்கு நாட்களாக இருந்த அந்த கோவம், கையறுநிலை இன்று தனிந்து இருக்கிறது, எதிர்பார்த்த ஒன்று தான். போன வருடம் இதே போல நிர்மலா தேவி அவர்களின் உரையாடலுக்காக, அதற்கு முன் 7 வயது குழந்தையின் கொலை மீதான தஸ்வந்த் என்ற நபருக்காக, அதற்கு முன் விஷ்ணுப்ப்ரியாக்காக அதற்கு முன் பல நிர்பயாக்களுக்காக என வெவ்வேறு வகையான குற்றங்கள். ஆனால் எல்லாமே பெண்களுக்கு எதிராக நடந்த குற்றங்கள். நண்பர்கள், தோழிகள், என்னை விட வயது மூத்தவர்கள் தங்களால் முடிந்த வரை WhatsApp, Facebook, Twitter, Instagram, Tik Tok என தங்களது ஆதங்கங்களைலக் கொட்டிக் கொண்டு இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்க ரெண்டு கேள்விகள் எனக்கு இருக்கு.
- பொள்ளாட்சியில் நடந்த குற்றங்களுக்கு நிஜமாகவே குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என நீங்கள் நம்புவீர்களா. சரி , அப்படியே அவர்களுக்கு தண்டனை கிடைத்தால் , இனி இது போன்ற குற்றங்கள் நடக்காது என உறுதியாக சொல்ல முடியுமா?
- இதே போன்ற ஒரு நிலை உங்களுக்கோ இல்லை உங்கள் குடும்பத்துக்கோ நேர்ந்தால் அந்த சூழலில் உங்களின் நிலை என்ன?
- ரெண்டாவது கேள்விக்கு நான் கேட்ட நபர்களில் வெகு சிலரே நேரிடையான பதிலைச் சொன்னார்கள். மற்றவர்கள் எல்லாமே எனக்கு இது போன்று நடக்காது என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.
அது போன்ற நிகழ்வை உங்களுக்கு நடந்தால் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று கேட்டுப்பாருங்கள். அதற்குக் கிடைக்கும் பதிலுக்கும் நீங்கள் பொதுவெளியில் தெரிவிக்கும் கருத்துக்கும் உள்ள நியாமான ஒப்பீடு தான் நீங்கள் யார் என்பதைக் கூறும். இந்த தொனியில் இருந்து தான் இந்த பதிவை எழுத வேண்டும் என நினைக்கிறேன்.
இந்த ரெண்டு கேள்விகளை நான் கேக்கும் போது எனக்கு நிறைய துணைக் கேள்விகள் வந்தது. அதனால் இந்த பதிவு நேர்த்தியாக இருக்காது, அப்படி வரிசைப்படுத்தித் தர வேண்டிய அவசியம் இல்லை என்பதும் ஒரு காரணம்.
குற்றங்களுக்கான காரணங்களைப் பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்து இந்த சமூகம் பார்க்கவே இல்லை, குற்றம் சாட்டப்பட்ட்வர்களின் பார்வையிலே இன்னும் பார்த்துக் கொண்டு இருக்கிறது. வன்புணர்வுகளுக்கு எப்படி பெண்ணின் உடையைக் குறிப்பிட்டார்களோ அதே போல இந்த இணைய வழி (cyber) குற்றங்களுக்குத் தொழில்நுட்பங்களைக் குறிப்பிடுகிறார்கள். பிற்போக்குத் தனமான பதில் கூட இது இல்லை, ஒரு வித முட்டாள் தனமான கருத்து.
90களின் தொடக்கத்தில், உன்னை அன்று ஒருவனோடு பார்த்தேன் என்று சொன்னால் பெண் பயப்படுவாள். பிறகு, ஒருவனோடு நீ வெளியில் செல்வது பார்த்தேன் என்று சொன்னால் பெண் பயப்படுவாள். பிறகு, உன்னுடைய புகைப்படம் ஆணோடு சேர்த்து வந்து இருக்கிறது என்று சொன்னால் பெண் பயப்படுவாள். பிறகு, உன்னுடைய படம் தவறாக சித்தரித்து வந்து இருக்கிறது என்று சொன்னால் பெண் பயப்படுவாள். பிறகு இப்போது உன் அந்தரங்கமாக விசயங்கள் இணையத்தில் வந்து இருக்கிறது என்று சொன்னால் பெண் பயப்படுகிறாள்.
ஆக, இங்கு எல்லா நிகழ்வுகளிலும் தொழில்நுட்பம் மாறி இருக்கிறது, சொல்லப்போனால் பரிணாமம் அடைந்து இருக்கிறது. இங்கே மாற்றமே அடையாத ஒரு நிகழ்வு பெண்ணின் பயம். இதெல்லாம் தப்பு என்று அவளுக்கே தெரியாமல் அவள் நம்பும் ஒரு உளவியல். இந்த சமூகம் எந்த அளவுக்கு தொழில்நுட்பங்ளையும் அறிவியலையும் கற்றுக்கொள்ள துடிக்கிறதோ அதே அளவுக்கு மனிதம்/ மானுடவியல் பற்றிப் படிக்க மறுக்கிறது.
காமம் குறித்த புரிதல்கள் இங்கே சரியாக புரிந்துக் கொள்ளப்படுகிறதா என்பதே இதன் சுருக்கமான கேள்வியாக இருக்கும்.
சித்தரிக்கப்பட்ட (Morph) செய்யப்பட்ட புகைப்படங்களையோ இல்லை திருட்டுத் தனமாக வெளிவந்த நிர்வாண படங்களையோ கொண்டு (சுய)இன்பம் காணும் ஒரு பாலியல் வறட்சி இங்கே நிலவுகிறது. பாலியல் குறித்த புரிதல்கள் தப்பாகவே நம்ப வைக்கப்படுகிறது. நான்கு வருடங்களாக வட இந்தியாவில் இருக்கிறேன், இங்கே படித்த இளைஞர்களிடம் இருக்கும் புரிதல்கள் கூட தமிழ் சமூகத்தில் இல்லை. சுய இன்பம் செய்வது ஏதோ குற்றம் போல நினைக்கிறார்கள், சிலப்பேர் எப்படி செய்ய வேண்டும் எனத் தெரியாமல், மீதிப் பாதிப்பேர் அப்படி என்னவென்று தெரியாமல் இருக்கிறார்கள். யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் இது தான் சரியென நம்பிக்கொண்டு இருப்பதன் விளைவு தான், சித்தரிக்கப்பட்ட படங்களைக் கொண்டு இன்பம் காணுவது.
பதிவு ஒன்று பார்த்தேன், PORN வீடியோக்களைத் தடை செய்ய வேண்டும், அது தான் குற்றங்களுக்கான காரணம் என்று. PORN மற்றும் SCANDAL வீடியோக்களுக்கு வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்கள் என்று தான் நினைக்கத் தோண்றுகிறது. நீங்கள் ஒத்துக்கொள்ள வில்லையென்றாலும் PORN என்பது ஒரு கலை (art). தன்னுடைய உடலை விரும்பி, முழு விருப்பத்தின் பேரில் செய்யும் தொழில். உலகம் முழுக்க நடக்கும் வியாபாரம் அது. வயது வந்த யார் வேண்டுமானாலும் பார்க்கலாம்.
Scandal என்பது அப்படி இல்லை, அனுமது இல்லாமல் திருட்டுதனமாக ஒருவரின் அந்தரங்கம் தொடர்பான வீடியோ அது. யாருக்கோ, விருப்பத்தின் பேரில் அவர்கள் அனுப்பும், இல்லை அவர்கள் இருவரும் எடுக்கும் வீடியோ அவை, அவர்கள் தொழில்முறை சார்ந்தவர்கள் அல்ல. இந்த மாதிரியான வீடியோக்களை நீங்கள் பார்த்து கொண்டு (சுய) இன்பம் காண்பவராக இருந்தால் நிச்சயம் உங்களுக்கு காமம் தவறாக கற்பிக்கப்பட்டுள்ளது. உங்களுக்கே தெரியாமல் நீங்கள் இணைய வழி (cyber) குற்றங்களை மறைமுகமாக ஆதரீக்கிறீர்கள் என்று பொருள். இந்த வகை வீடியோக்களை நீங்கள் பார்ப்பவர் என்றால், அது உங்கள் உளவியலை உங்களுக்கு தெரியாமலே மாற்றி இருக்கும். இங்கு தடைச் செய்யப்பட வேண்டியது PORN அல்ல, PORN என்ற பெயரில் நம்ப்படும் Scandal வீடியோக்களை.
சரி, அடுத்த கேள்வி இதெல்லாம், கல்யாணம் ஆகாத நபர்களுக்கு ஒத்துக் கொள்ளலாம், கல்யாணம் ஆன பெண்கள் தானே அதிகம் இதில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு என்ன பதில் சொல்லுவாய் எனக் கேட்டால்?
அவர்கள் தான் ரொம்ப பாவம் என்பேன், குடும்பத்திற்க்கு பயந்து வெளியில் சொல்லாமல் அவர்கள் கேட்க்கும் பணத்தைக் கொடுக்க முன் வருவார்கள், அது தான் அவர்கள் குறிவைக்கப் படுகிறார்கள்.
இணையத்தில் ஒரு பதிவைப் பார்த்தேன்,
“கல்யாணமான பெண்ணுக்கு அப்படி என்ன உடல் தேவை, அதிலும் மருத்துவம் படித்த பெண். நல்லா அந்த பெண் அனுபவிக்க வேண்டும்”
இதற்கு நேரிடையாக நான் பதில் சொல்வது சரியாக இருக்காது, பேதம் என்ற புனைவு சிறுகதையில் வரும் ஒரே ஒரு பத்தியை மட்டும் குறிப்பிடுகிறேன்.
"தேவி அமைதியாக இருந்தாள். மது சொல்வதில் உண்மை இருக்கவே செய்தது. நினைப்பதை எல்லாம் வரைமுறை இன்றிப் பேச இணை தவிர்த்த இன்னொரு ஆண் தேவைப்படுகிறான். தான் சந்தோசமாக இருந்ததை பகிர்வதற்கு, தன் கணவனை குறை சொல்வதற்கு, அல்லது வியந்து பேசுவதற்கு. எல்லாமே காமம் சார்ந்து இயங்க வேண்டும் என்றில்லை. காமம் சார்ந்தும் இயங்கலாம். நட்பு முலாம் பூசப்பட்டக் கிளர்ச்சி அது. அவர்கள் அதனை மனமுதிர்ச்சி என்று சொல்லிக்கொள்வார்கள். தேவிக்கு இந்த நட்பு கொஞ்சம் பயம் தந்ததால் அவளால் சகோதரத்துவத்தில் இலகுவாக நிற்கமுடிந்தது. நண்பன் என்று சொல்லிக்கொள்பவனிடம் இதுவெல்லாம் பேசலாமா கூடாதா என்றெல்லாம் அவள் யோசிக்கவில்லை. முந்தைய இரவில் என்ன மாதிரியான பொசிசன் ட்ரை செய்தோம் என்பது வரை பகிர்ந்தாள். பகிர்வதற்காகப் புணர்ந்தாள். பல வேளைகளில் எப்படியெல்லாம் புணரப்பட வேண்டுமோ அதைக் கற்பனையாக்கிச் சித்தரித்துச் சொல்வாள். மனசஞ்சலம் இல்லாமல் அதைச் சொல்வதற்கு நண்பன் என்ற உறவுமுறை அவளுக்கு ரொம்பவுமே உதவியது. அவள் சித்தரித்துச் சொன்ன கற்பனைப்படி, நண்பனால் ஒருநாள் புணரப்பட்டாள்".
எழுத்தாளர் பிரபஞ்சன் இப்படி தான் சொல்லுவார், தன்னுடய அப்பாவுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பின் அதை மகனாக இருந்தாலும் அவன் கேட்க கூடாது, அது அப்பாவின் தனிப்பட்ட உரிமை, அதைக் கேட்க மனைவிக்கு மட்டும் தான் உரிமை உண்டு, அவர்கள் தான் பேசித் தீர்க்க வேண்டும். மகனாக இருந்தாலும் அவன் மூன்றாம் நபர் என்பார்.
இது போன்ற நிகழ்வுகளை நீங்கள் நேரிடையாகவோ இல்லை தர்க்க ரீதியாகவோ அணுக கூடாது. Anthropological approach என்று சொல்லுவார்கள், அதாவது குற்றத்திற்கு என்று ஒரு நியாயம் இருக்கும் அல்லவா, அந்த நியாயத்தில் இருந்து இதை அணுக வேண்டும். நான் வேறு ஒரு பதிவில் குறிப்பிட்டது போல கலவி என்பது வெறும் உடல் சார் வடிகால், அதை நீங்கள் புனிதப் படுத்தினால் இல்லாத கற்பு என்ற ஒன்றை நீங்கள் ஆதரீக்கீறிர்கள் என்று அர்த்தம்.
சரி, வாலிபர்கள் , கல்யாணமானவர்கள் மட்டுமல்ல பள்ளிக்குழந்தைகள் கூட இதில் இருக்கிறார்களே, இரு பாலின (Co – Education )பள்ளியில் படிப்பதால் தான் எல்லா பிரச்சனையும் , இதுக்கு என்ன சொல்லுவாய் எனக் கேட்டால்,
Co – Education மிகவும் மோசமாக இருக்கும் ஒரு மாநிலம் தமிழ் நாடு என்பேன், பள்ளிகூடங்களில் Co – Education எவ்வாறக எனக் கொஞ்சம் எட்டிப்பாருங்கள். ஆணும் பெண்ணும் அருகருகே இருந்தாலும் அவர்கள் பேசிக் கொள்ளக் கூடாது, பேசினால் அபராதம். ஆண், பெண் தனித்தனியாக படிக்கும் பள்ளிகளை விட இது மோசம். விளையாட்டாக, ஆசிரியரிடம் ஆண்கள் எப்போது வயதுக்கு வருவார்கள் என்று கேட்டேன், அதற்கு அவர், உன்னுடய தலையை தவிர்த்து மற்ற உடல் பாகங்களில் எப்போது உரோமங்கள் முளைக்கிறதோ அப்போது என்றார். 13 - 17 வயதில் ஹார்மோன் வெளிக்காட்ட தொடங்கும்போது எதிரிலே இருக்கும் எதிர் பாலினர்களிடம் நீ பேசக் கூடாது, தொடக் கூடாது, சேர்ந்து அமரக் கூடாது என்பது என்ன மாதரியான நடைமுறை.
அம்மா, தங்கை, அக்கா, அண்ணன், தம்பி, அப்பா என்ற உறவு முறையில் வளர்கிறார்கள் அது போததா என்றால் இல்லை என்பேன். 90 சதவீத பிள்ளைகள் விடுதியில் தங்கிப் படிக்கிறார்கள். விடுமுறைக்காக மட்டும் ஊருக்கு வரும் தலைமுறையை உருவாக்கி உள்ளோம். இன்று அது, வெறும் படிப்பு,சோறு, தூக்கம் என அவர்கள் பழக்கப் படுத்தப்பட்டு விட்டார்கள், விடுமுறையை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள், வீட்டில் முழுமையாக தங்காத போது வீட்டில் இருக்கும் உறவுகளைப் பற்றி எப்படி புரிந்துக் கொள்ள முடியும்.
இன்னும் கேள்விகள் இருக்கு ஆனால் இந்த கேள்விகளே போதும் என்று நினைக்கிறேன்.
எஸ். ரா , கிரேக்கத்தின் (Greek) ஒடிஸியஸ் (Oedipus) என்று அழைக்கப்படும் சோபகஸின் (Sophocles) ஒரு நாடகம் பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். அந்த நாடகம் இவ்வாறக தொடங்குகிறது,
ஒரு நாடு முழுக்க எல்லா குற்றமும் நடக்குது, எல்லா மோசமான விசயங்களும் நடக்குது, மக்கள் நோயுறாங்க. மன்னர் தீடிரென கேட்கிறார், குற்றத்திற்க்கு யார் காரணம், ஏன் நடக்கிறது, என்ன காரணம், யாரவது கண்டுப்பிடித்து சொன்னீர்கள் என்றால், அதை நான் தீர்த்து வைப்பேன் என்று குடிமக்களுக்கு உத்தரவு போடுகிறார்.
மன்னர் சரியாக நாட்டை கவனிக்க தவறியதாலே இவை எல்லாம் நடப்பதாக நாடகம் தொடரும். ஆக, யார் குற்றத்தை விசாரிக்க தொடங்குகிறார்களோ அவர் தான் குற்றவாளி என்று சோபகஸ் அடையாளம் காட்டுவார். கிட்டதட்ட இங்கேயும் இதே நிலை தான். எப்போது பதிவுகளை மட்டும் போட்டுவிட்டு இந்த சமூகம் தன் வேலையக் கவனிக்க தொடங்குகிறதோ குற்றங்கள் மீண்டும் அங்கு இருந்து தொடங்குகிறது.
நான் ஆரம்பத்தில் கேட்ட அந்த ரெண்டு கேள்விகளில் முதல் கேள்வியை திரும்பப் படிக்கவும், உங்களால் பதில் சொல்ல முடியுமா. ஆக, நம்மை (இந்த தலைமுறையை) இனி திருத்த முடியாது, காலம் கடந்து விட்டது. ஆனால் அடுத்த தலைமுறையை இதில் இருந்து காப்பாற்ற முடியும்.
பாலியல் கல்வி (Sex Education) பள்ளிகளில் கட்டாயமாக்க பட வேண்டும். இது எப்படி பதில் ஆக இருக்க முடியும், முடியவே முடியாது என்று சொல்வீர்களா.
தமிழ் நாட்டைப் பொறுத்த வரை, Sex Education என்பது விந்தணு எப்படி பெண்ணுறுப்பில் சென்று குழந்தை உருவாகும், எப்படி கர்ப்பம் தரிக்கலாம், AIDS வராமல் தடுப்பது எப்படி என்பது போன்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது மட்டும் தான் என்றால் நானே வேண்டாம் என்பேன். நீங்கள் விண்ணப்ப படிவங்கள் நிரப்பும் போது GENDER என்ற ஒன்று இருக்குமே அதுதான் இது. இங்கு SEX என்பது, ஆண் - பெண் குறித்த புரிதல்கள். ஒரு ஆண் எப்படி இருப்பான், அவனுடைய குணாதிசியம் என்ன, அவனுடைய உளவியல் என்ன அதே போல பெண்ணுக்கு. மனித உடல் பற்றிய அறிவு மட்டுமல்ல. மனிதனின் உளவியல் குறித்தும் சொல்லிக் கொடுப்பது தான் பாலியல் கல்வி.
இப்போது உள்ள மாணவர்கள் ரொம்ப மோசம், ஆறாவது படிக்கும்போதே எல்லாமே அவனுக்கு தெரிந்து விடுகிறது என்று பள்ளி ஆசிரியர்கள் புலம்புவதைக் கேட்டு இருக்கிறேன். மாணவர்களுக்கு எப்படி புரியுமோ அப்படி சொல்லிக் கொடுக்க தான் ஆசிரியர்கள், தலைமுறை வளர்ச்சியினால் மாணவர்களுக்கு இருக்கும் அறிவுக்கு ஆசிரியர்கள் தான் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் சரி, கல்லூரி பேராசிரியர்களும் சரி தங்களைப் புதுப்பித்துக் கொள்ளாமல் மாணவர்களை மட்டும் வெகு காலமாக குற்றம் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
‘குற்றமே தண்டனை’ படத்தில் ஒரு வரும் 30 வினாடி காட்சி ஒன்றில் ஆசிரியர் சொல்லுவார்,
“Correct, எங்க எங்கயோ தப்பு தப்பா கற்றுக்கொள்றத நாம அவனுக்கு சரியா சொல்லித் தரலாமே , இதுல என்ன தப்பு இருக்கு” என்பார்.இந்த சமூகத்தில் எதாவது மாற்றம் நிகழ வேண்டும் என்றால் அது அரசியல்வாதிகளிடமோ இல்லை அதிகாரிகளிடம் இருந்தோ சாத்தியம் இல்லை, அது ஆசிரியரிகளிடம் இருந்து மட்டும் தான் தொடங்க முடியும்.
நிற்க, இவ்வளோ பேசிட்டு,பொள்ளாட்சியில் நடந்த குற்றத்திற்கு எதுமே சொல்லாம, அவர்களை அப்படியே விட்டுவிடலாம என்றால், பெண்ணியம் குறித்து எப்படி ஆணால் பேசவோ புரிந்து கொள்ளவோ முடியாதோ அதே போல பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் ஆணால் தண்டனை சொல்ல முடியாது, அப்படி சொன்னாலும் அது ஒரு சார்பாக இருக்கும், அந்த தண்டனையை பெண்ணே அளிக்கும் சுதந்திரத்தை உறுதி செய்வது மட்டுமே ஆணின் வேலையாக இருக்க வேண்டும். சரி , காதல் என்ற போர்வையில் தானே அவர்கள் ஏமாந்து போனார்கள், காதல் தேவையா என்றால், அதையும் தீர்மானிப்பது அவளாக இருக்க வேண்டும், நாம் அல்ல.
இது தான் உன்னுடைய தீர்வா என்றால், இது என்னுடய பார்வை அவ்வளவே. இந்த பதிவை நான், மராத்தியின் நவீன காலத்துப் பெண் கவிஞர் பிரந்தயா த்யா பவாரின் (pradnya daya pawar ) ‘அந்த படிகம்' கவிதையோடு முடிக்கிறேன். இந்த கவிதையின் பொருள் புரியும் போது , நான் மேலே எழுதிய பதிவு முழுமை பெறும்.
இந்த துக்கம் தடைப்படுத்தப்பட்டுள்ளது
எனது ரத்த நாளங்களில்;
வெகு நாட்களாக என்னால் சரியாக
மூச்சுவிட கூட முடிவதில்லை,
வாழ்க்கை அத்துன்னை கட்டுந்ததாக மாறிவிட்டது.
எனது அச்சிலான அடையாளங்கள்
மனைவி, தாய், காதலி, தோழி
ரத்தமும் சதையுமான எனது
நெஞ்சின் அடி ஆழத்தில் இருந்து
நான் வாழ்ந்த அவை;
மனைவி, தாய், காதலி, தோழி
என்னைப் பார்த்து முகம் சுளிக்கிரார்கள்
வன்மத்துடனும் குரோதத்துடனும்!
புரட்சிகர முடிவை நோக்கி நீ போனால் என்ன
ஒரு பெண்ணாய் லட்சணாமாய் எழுதுக் கொண்டே இரு
பௌத்தம் என்னும் பாடகையை மணம் கொள்
ஏன் இத்துனை மனக்கசப்புடன் எழுத வேண்டும்
ரொமன்டிக் பாணியில் எழுதிப் பார்க்கலாமே
இந்த குரல்களை நான் கேட்க நேர்கிறது
எந்நேரமும் எல்லா இடத்திலும்
சூரிய ஒளி பரவும் வேளையிலும் இரவிலும்
நள்ளிரவில் கூட
சாலைகளில், தனிமைகளில்
நடைமேடைகளில் அல்லது கனவுகளில்
பூத்துப் போன வாடையுடன்
வெகு நாட்களாக சேர்த்து வைக்கப்பட்ட
எதிர்பார்ப்புகளின் குளம் தொடர்ந்து கசிகிறது,
சகிக்க முடியாத துர்நாற்றத்துடன்
தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் உண்டா ?
அந்த படிகம் ,ஒளிர்வது, அரியது-
என் கரங்களுக்கு எட்டாமல் நழுவி செல்கிறது.
பக்கங்கள் புரட்டப்படும்.

0 Comments