இப்படியும் சில மனிதர்கள் - 3



நான் யாரையும் பாத்துப் பொறாமை பட்டது இல்ல , இவங்கள மாதிரி வரணும்னு ஆசை பட்ருக்கன் ஆனா இவங்கள மாதிரி நம்மலாலா வர முடியாதேன்னு நினைச்சுப் பொறாமை பட்டது ரொம்பச் சிலரைப் பாத்துதான். அப்படிப் பட்ட ஒருத்தர் பத்தின பதிவு இது

இந்த ஏப்ரல் மாசம் காலேஜ்ல படிச்ச என் தோழிய பாக்கலன்னு தோனுச்சு , அவ இங்க இருக்க டேராடுன்ல படிச்சுட்டு இருந்தா , அவள பாத்துட்டு அப்டியே அங்க சுத்திப் பாக்கலன்னு

நீங்க நினைக்ற மாதிரி கிளம்பும் போதே திரும்பி வரவும் டிக்கெட் போட்டுட்டு ,ஹோட்டல் , பயணக் குறிப்பு இதலாம் முடிவு பண்ணிட்டு போற மாதிரி பயணம் இல்ல அது. போகத் தேவையான அதே அளவுக்குப் பணம் purseல ஓரமா எடுத்து வச்சுட்டு மீதி இருக்கப் பணத்துக்கு, சிக்கனமா பணம் செலவு பண்ற மாதிரி பயணம் , அந்த நாலு நாள்ல ரிஷிகேஷ் , ஹரித்வார் ,முசொரி ,டேராடுன் முக்கால்வாசி சுத்தி பாத்தன் , கடைசி நாள் இன்னிக்கு இரவு ஊர்க்குத் திரும்பப் போலாம்னு நினச்ச அந்த நாள் , பக்கதுல தப்பகேஷவ்ர் கோவில் இருக்கு, நல்லா இருக்கும் போங்கன்னு ரூம் சர்வீஸ் பண்ண அந்தப் பையன் சொன்னன் . அதையும் போய்ப் பாப்போமே அப்படின்னு ஆட்டோக்காக காத்துகிட்டு இருந்த நிமிஷம்

ஒரு ஆட்டோ வந்துச்சு
----------------------------------------------------------------

ஆப்கோ கான் சாங்கே சாப் -ன்னு கேட்டாரு

தப்பகேஷ்வர் கோவில் போங்க

(சிரிச்சுகிட்டே) தமிழா நீங்க ,

ஆமா

சரிங்க சார்,

சார்லாம் வேணாமே , என் பேரு முருகா

(மறுபடியும் அந்தச் சிரிப்பு )

உங்க பேரு என்ன

(சில காரணங்களுக்காகப் பெயரைத் தவிர்க்க்றேன் )

இங்க எத்தன வருசமா இருக்கீங்க


ஒன்ற வருஷம் சார்

அம்மா , அப்பாலாம்

அவங்க ஊர்ல இருக்காங்க சார், நீங்க எந்தப் பக்கம்

நாமக்கல்

அங்க இருந்து இங்க எப்படி

இல்ல இல்ல , இங்க டெல்லியில வேலை பாக்கறன், சும்மா ஒரு நாலு நாள் வந்தன்

இன்னைக்குத் தான் வந்தீங்களா

இல்ல , இன்னைக்குத் திரும்பிப் கிளம்பறன்

சூப்பர் ஜி , தலைவா எனக்கு ஒரு ஹெல்ப்

சொல்லுங்க பாஸ் ,

என் பையனுக்கு இன்னைக்குப் பொறந்த நாள் ,அவனையும் கூட்டிட்டுக் கோவில் போலாமா ? உங்களுக்கு ஒகே அப்டினா

உங்களுக்குக் கல்யாணம் ஆச்சா

3 வருஷதுல ஒரு பையன் இருக்கான்

நிசமாவ

இதலாம் யாராவது பொய் சொல்லுவாங்களா

தப்பா நினைக்காதீங்க, உங்க வயசு என்ன

இருபத்திநாலு

எப்போ கல்யாணம் ஆச்சு

19ல

லவ்-வா

அதான் 19ன்னு சொல்றேனே


(டக்குனு அமைதி ஆனன், இந்த லவ் கதைங்க கேட்டுக் கேட்டு சலிச்சுப் போச்சு ,அவரே சொன்னா கூடக் கேட்க கூடாதுனு வேற எங்கயோ பாத்தன்

இப்போ தான் அவர கவனிக்கரன் ,

ரொம்ப அழகான முகம் இல்ல , சுத்தமா எனக்குப் பிடிக்கவே இல்ல அதுலயும் அந்த எத்துப்பல்லு .ரொம்பக் கருப்பான முகம் , பின்னாடி சட்டைக் காலார்ல் வியர்வைப் படலம் அப்டியே வெள்ளையா ,கைல ஒரு காப்பு , கழுத்துல ஒரு ஏதோ ஒரு உருவம் படிச்ச கயிறு ,நெத்தியில சந்தனப்பொட்டு அதுக்கு நடுவுல குங்குமம், காதுல கடுக்கன் .அந்த உருவம் அழகானதுன்னு சொல்ல எந்த அறிகுறியும் எனக்குத் தெர்ல

அவர்கிட்ட பேசவே இப்போ இல்ல ,

வீடுகிட்ட போய்டோம்

சார் இங்க இருங்க , வந்துரன்

எனக்குத் தாகமா இருக்கு , நானும் வரவா

( எனக்கு அவங்க மனைவி பாக்கணும் தோனுச்சு அதான் போனன் )

அட வாங்க சார் போலாம்

 போனோம் , அவங்க வீட்ல அவர் மனைவி

 ரொம்ப ஒல்லியான உருவம் , நசிர்யா மாதிரி ஒரு உருவம் ஆனா கொஞ்சம் மாநிறம் .முகத்துல பருக்கள் , சாதாரணமா ஒரு சுடிதார் ,கழுத்துல தாலி மாதிரி ஒரு செயின் , காதுல கவரிங் தோடு , கைல கண்ணாடி வளையல் .இதுக்கு மேல எளிமையா இருக்க முடியாது மாதிரி இருந்தாங்க

ரெண்டு வார்த்தை பேசுனன், அவ்வோள தான் .

அங்க அவங்க குழந்தை , அவங்க அப்பாவ பாத்த உடனே ஓடி வந்துட்டான் .எப்படித்தான் இந்தக் குழந்தைகளுக்கு அடையாளம் தெர்யுமோ ?

அந்தக் குழந்தைய கூட்டிட்டு வண்டியல போனோம் , அவன் பயங்கரக் குறும்பா இருந்தான், அவன பண்ற வேலை , சின்ன வயசுல நானும் இப்படி இருந்த மாதிரி தோனுச்சு , அவன என் மடியில தூக்கி வச்சுகிட்டன்.)




படம் : லோஷ்மிதா

கல்யாணம் ஆகி இப்போ எப்படி இருக்காங்கன்னு கேக்கணும் போல இருந்துச்சு .நான் பாத்தா சினிமா , புக்ஸ் எல்லாமே கல்யாணம் வர தான் இருக்கு அதுக்கு அப்புறம் என்னன்னு பரிச்சியம் இல்ல .என் அக்கா லவ் பண்ணி தான் கல்யாணம் பண்ணிகிட்டா ,அதுனால ஓரளவு தெரியும் . எல்லார்க்கும் இப்படித்தான் இருக்கும்ணு உறுதிப்படுத்தனும் போல இருந்துச்சு .

கேக்கலாமா வேணாமா 

குழந்தை அழுதான் , டீ கடையில நிறுத்தி டீ சாப்டோம் , அவனுக்கு மிட்டாய் வாங்கிக் கொடுத்தன். திரும்பப் பயணம் தொடர்ந்தோம் ) 

பாஸ் , கோவிலுக்குப் போக எவ்ளோ நேரம் ஆகும் 

25 நிமிஷம் ஆகும் சார், 

(அமைதியா இருந்தோம் , அங்க இருக்க ஒரு ஸ்கூல் காமிச்சு )

இங்க தான் ராஜீவ் காந்தி படிச்சாரு 

அப்டியா 

(என் மனசு வேற ஒரு குழப்பத்துல இருந்துச்சு ) 

பாஸ் , கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களா 

சொல்லுங்க சார் 

நிசமாவே 19 வயசுல கல்யாணம் ஆச்சா , எப்டி சார் என்னால நினைச்சு கூடப் பாக்க முடியல 

அது தோணும் சார், எப்போ தோணுதோ அப்போ தான் பணிக்கணும்
 , எங்களுக்கு அப்போ தோனுச்சு பண்ணிகிட்டோம். 

( என் மனசு வேற எங்கயோ போச்சு . சொந்தகார அண்ணா கல்யாணம் வேணாம்ன்னு ரொம்ப நாள் சொலிக்கிட்டு இருந்தாரு .நல்ல வேலை , புதுப் பைக் , நெறைய சம்பளம் ஆனா வேணாம்னு இருந்தாரு .எல்லாரும் ஒரு மாதிரி பேசுனாங்க ,

நான் கேட்டன், 

இல்ல முருகா , எனக்கு இன்னொருத்திய இங்க கொண்டு வர தோனல , அவள பாத்துக்கணும் , அவ அம்மா அப்பா , அவ சொந்தக்காரங்க அவங்கலாம் நினச்சாலே இப்போ பயமா இருக்கு. உனக்கு இப்போ புரியாது , கல்யாணம் பண்ற வயசு வந்த்ருச்சுன்னு எல்லாரும் உன்ன பேசுவாங்க பாரு , அப்போ இது புரியும் . 

இப்போ அவர்க்குக் கல்யாணம் ஆகி ஒரு குழந்தை இருக்கு ) 

வீட்ல ஏதும் சொல்லலையா

லவ் பத்தி கேக்கறீங்களா 

நெறைய பாத்துட்டோம் 

செமையா லவ் பண்ணீங்களா 

அய்ய , அதலாம் இல்ல .ரெண்டு பேரும் பாத்தோம் , பேசிக்கிட்டோம் ,புடிச்சுப்போச்சு அவ்வளோ தான் 

அவ்வளோ தானா 

ஆமா

 எங்கையும் வெளில போனது இல்லையா , இந்த ஹோட்டல் , சினிமா , காபி ஷாப் மாதிரி 

ஒரே ஒரு டைம் வெளில போனோம் , படத்துக்கு . அன்னைக்குத் தான் மாட்டுனோம் 

வீட்ல பயங்கரமா அடிச்சாங்களா , 

நாங்க caste வேற , ஆனா அது பெருசா பிரச்சனை இல்ல . அவ வீட்ல கொஞ்சம் பண வசதி இல்ல , அவங்க வீட்ல என்ன விட அழகான பையன் பாக்கலாம் அப்படின்னு 

(எனக்கு ஒரு விதத்துல சரின்னு பட்டுச்சு ,ரெண்டு பேருமே நிறம் குறைவு தான் ) 

நீங்க என்ன சொன்னீங்க 

பாஸ் , அழகானது எதுமே இல்ல , புடிச்ச விசயம் தான் அழகா இருக்கும் , தலைவர் சொல்ற மாதிரி புடிக்கலைன்னா உலக அழகி கூடச் சுமார் தான் .எனக்கு அவளப்பிடிச்சு இருந்துச்சு , அவளுக்கும் அதே மாதிரி அவளோ தான்
 . 
தப்பா நினைக்காதீங்க, அப்போ நீங்க ஓடி வந்துடீங்க 

ஆமா , சரியா கன்டுபிடிச்சுடீங்க ( கோரமான சிரிப்பு அது ) 

(இவரு உண்மையா சொல்ரார இல்ல விளையாடுரா) 

பாஸ் , இங்க பாருங்க என் கை சிலுத்துகிச்சு , உண்மைய சொல்லுங்க 

அட ஆமா சார் , யாருமே வேணாம் நீ தான் வேணும்னு கேட்டா , என்ன செய்ய

அப்போ உங்க கைல பச்சை குத்தி இருக்கறது அவங்க பேரா 

இல்ல அது எங்க அம்மா பேரு , ஓடிப் போகறதுக்கு ஒரு வாரம் முன்னாடி குத்திட்டு வந்தன் அப்போ கூடத் தெரியாது அடுத்த வாரம் இப்படிப் பண்ண போறன்னு .

அப்புறம் எப்படி அங்க இருந்து இங்க , 

எந்திரன் படத்துக்குப் போன போது தான் மாட்டிகிட்டோம் , அப்போ இருந்து 6 மாசம் வீட்ல .நிறய பிரச்சனை , சண்டை எல்லாமே 
அவ ரொம்பத் தைரியமான பொண்ணு சார் , பாக்கத் தான் எலும்பா இருப்பா மனுசல இரும்பு அவ .வந்தா ஒரு நாள் , நீ வா போலாம் இதுக்கு மேல முடியாதுன்னு , யாருமே வேணாம் , இந்த ஊரு வேணாம் , கொஞ்ச நாள் கழிச்சி வரலாம்னு 
என்ன பண்றதுன்னு தெர்ல, கிளம்பிடோம் 

ஒவ்வொரு ஊர்ல இருந்துட்டு இப்போ இங்க வந்து இருக்கோம் 

எப்படிச் சார் , யாருமே வேணாம்னு இருக்க முடியுது 

நீங்க லவ் பண்றீங்களா , 

இல்லையே 

ஏன் கேக்கறீங்க 

இல்ல இவளோ ஆர்வமா கேக்கறீங்க 

நீங்க சொல்றது நம்ப முடியல அதான் 

சிரிக்கிறாரு 

அவர் பையன் இப்போ என்ன பாத்து முறைக்கரான்,

நீங்க லவ் பண்றீகனு வைங்க, உங்க வீட்ல ஒத்துக்கல என்ன பண்ணுவீங்க , 

ஒத்துக்கற வர வெயிட் பன்னுவோம் பாஸ் 

சரி அப்டி வெயிட் பண்ணியும் ஒத்துக்கல 

எங்க வீட்ல ஒத்துப்பங்க 

கேட்டதுக்குப் பதில் சொல்லுங்க, அப்டி ஒத்துக்கல என்ன பன்ணுவீங்க 

(அமைதியா இருந்தன் , அதுக்குள்ள கோவில் வந்திருச்சு
சாமி கும்பிட்டு வெளில வந்தோம் , நான் இதுவர பாத்ததுல ரொம்ப ரொம்பச் சாந்தமா இருந்தது அந்தக் கோவில் அந்த ரம்மியமான சூழ்நிலை .வெளில வந்தோம் , அவரே ஆரம்பிச்சாரு ) 


அதே நான் , நானும் அவளுக்கு வெயிட் பண்ணன் , ஒரு நாள் அவ கை மீறி போற மாதிரி வந்துச்சு. எங்கயாது கூட்டிட்டு போடான்னு ஒருத்தி உங்கள கெஞ்சிரா

இப்போ போனாலும் அவங்க தான் என் அம்மா அப்பா ஆனா அவ அப்டி இல்லையே. எப்போ வேணா திரும்ப வந்து சமாதானம் வீட்ல பேசிக்க முடியும் ஆனா அவ இப்போ விட்டா இனி சம்பந்தமே இல்லையே அதான் போனோம். 

யாருமே வேணாம்னு இருக்க முடியுதா 

யாருமே வேணாம்னு அவ இருக்கறாலே 

போன் இருக்கா வீட்ல பேசிப்பீங்கள 

ஆளுக்கு ஒரு போன் இருக்கு, அவ கிட்ட தவற வேற யார்கிட்டையும் பேச மாட்டன் 

வேற யார்க்கும் உங்க நம்பர் தெரியாதா 

ஆட்டோ ஸ்டண்டுல தெரியும் ஆனா புதுசா போற ஒவ்வொரு ஊருக்கும் ஒரு நம்பர் வாங்கிப்போம் 

நீங்க ரெண்டு பெரும் மட்டும் பேசிக்கவா 

பேசிக்ககூட மாட்டோம் 

மூணுமணி நேரத்துக்கு ஒருக்க மிஸ்டு கால் கொடுப்போம் 

அப்படி வரலான 

ஏதோ பிரச்சனைன்னு நினைப்போம் 

இதுவர அப்படி நடந்துருக்கா 

(பையன பாக்கறாரு ) இவன் அப்படித்தான் பொறந்தான் 

கேட்டதுக்குப் பதில் சொல்லவே இல்லையே, வீட்ட மிஸ் பண்ணலயா 

ரொம்ப மிஸ் பண்றோம், நல்லா வந்துட்டு போகணும் 

அதலாம் ஒன்னும் இல்ல , இப்போவே போலாம் இல்ல

இல்ல சார் , கல்யாணம் பன்ணிட்டுப் போனான் , இப்போ புழைக்கத் தெர்லன்னு வந்துட்டான் பேசுவாங்க 

நம்ம வீட்ல யாரும் அப்படி நினைக்க மாட்டாங்க 

வீட்ல நினைக்க மாட்டாங்க ஆனா ஊரு பேசுமே 

ஊர் பேசறதுக்குக் கவலை படற ஆளா நீங்க 

(அவர் இப்போ ஒரு மாதிரி பாக்கறாரு ) 

இல்ல சார் , ஒரு வேல நம்ம வீட்லயும் அப்டி நினச்சுட்ட என்ன பண்ண அப்பறம் அங்க இருக்க முடியாது அதான் 

கடவுள் புண்ணியத்துல ரெண்டு வீடும் நல்லா இருக்கு , எதாவது பிரச்சனைனா கிளம்பிடுவோம் 

அப்போ அங்க தெரிஞ்சவங்க இருக்காங்களா 

இருக்கலாம் 

உங்க வீட்ல என்ன பண்றாங்க 

ஸ்கூல்ல டீச்சரா போற , போஸ்ட்ல B.Ed பண்றா 

உண்மையா இன்னும் நம்ப முடியல , லவ் பண்ண இப்படிலாம் பண்ண முடியுமான்னு 

நீங்க அழகா தானா இருக்கீங்க , லவ் பண்ணி பாருங்களேன் .தோணுதா இல்லையானு பாப்போம் 

நான் பண்ண மாட்டேன்னு எங்க சொன்னன், ஏதும் அமையல சார் 


(மறுபடியும் ஒரு டீ கடையில வண்டி இப்போ ) 

நீங்க சிகரெட் குடிப்பீங்களா 

இல்ல 

நான் குடிக்கவா 

குடிங்க பாஸ் 

(அடிச்சாரு ) 

நான் தலைவர்வோட வெறியன் 

அப்டியா 

இங்க பாருங்க 

( வாய்க்குல இருந்து செமயா சிகரெட் எடுக்கறாரு , வட்டமா புகை அவளோ அழகா, ) 

கடைசியா என்ன படம் போனீங்க 

தெறி சார் , விஜய் சூப்பர்ல 

உங்க வீட்ல யார பிடிக்கும் 

அவங்களுக்குப் பிரபு தேவானா உசுரு 

இன்னும் என்னலாமோ பேசுனோம் 

நான் கிளம்பற நேரம் வந்துச்சு சார் பஸ் ஸ்டான்ட் போங்க , திரும்பி போகணும் 

அவர்கிட்ட சின்ன வருத்தம் தெரிஞ்சுச்சு அத பாத்து எனக்கும் ஒரு மாதிரி ஆச்சு. 

உடனே உங்களுக்கு ஆசை எதாவது இருக்கா

நெறைய இருக்கே 

ஒண்ணு சொல்லுங்க பாப்போம் 

நான் பொறக்கும் போதே பணக்காரன் , என் பையன் அப்டி இல்ல அவன நல்லா கொண்டு வரணும் 

பாஸ் நான் ஒன்னு சொல்லட்டுமா, அவன் பாருங்க ரொம்ப நல்லா வருவான் 

உங்கள மாதிரி அவனுக்கு ஒரு ஷர்ட் வாங்கிப் போடணும் சார் ,எனக்குப் போடணும்னு ஆசை , இனி முடியாது அவனுக்கு நான் போட்டு பாக்கணும் 
-------------------------------------------- 

இப்போ அந்தக் குழந்தைய பாக்கரன் , எனக்கு என்ன சின்ன வயசுல பாக்கற மாதிரி இருந்துச்சு 
சின்ன வயசுல அப்பா கூட வெளில போகும் போது பெரும்பாலும் அப்பா லுங்கி தான் கட்டுவாரு , கல்யாணம்னா வேஷ்டி கடமைக்குன்னு . நான் கேப்பன் நீங்க ஏன் பட்டு வேஷ்டி கட்ட மாட்றீங்கன்னு அவரு சொல்லுவாரு , ஆசை தான் , இனி விருப்பம் இல்ல . உனக்குக் கட்டி பாக்கணும் தான் இப்போ தோனுதுன்னு 

இப்போ இந்தக் குழந்தைய பாத்தா அதான் தோணுது . 

இவன் வயசுல நான் இருக்கும் போது எங்க அப்பா கூடப் பேசவறங்க எல்லாரையும் பாப்பன் .அவரு கைல வாட்ச் இருக்கு நம்ம அப்பா கைல இல்ல, அவர் T. Shirt போட்ருக்காரு அப்பா கிட்ட இல்லன்னு .சில சமயம் கோவம் கூட வரும் 

அதே மாதிரி பார்வை தான் இப்போ அந்தக் குழந்தை கண்ணுல 

இங்க யாருமே தெரிஞ்சு பகட்டா இருக்கறது இல்ல , நமக்குத் தான் அது அப்படித் தோணும் , நம்ம கிட்ட இல்லைனு காமிக்கற மாதிரி , ஒரு வித இயலாமை அது 

ஒரு வேள என்கிட்ட இருந்த அந்த இயலாமை தான் , முத மாச சம்பளத்தில் அப்பாக்கு ஒரு T.Shirt , Jeans எடுத்துக் கொடுக்க வச்சருக்கும் போல 

இப்போ அந்தக் குழந்தைக்கும் அந்த மாதிரி எண்ணம் வர நானும் ஒரு காரணம் 

அவமானப் படுவதும் தோற்றுப்போவதும் புறக்கணிக்கப் படுவதும் மகத்தான ஆசிர்வாதங்கள் 
---------------------------------------- 

உங்க குழந்தைக்கு நீங்க ஹீரோவான்னு தெரியாது , எனக்கு நீங்க ஹீரோ 

சும்மா சொல்லாதீங்க , நீங்க தான் பாக்க ஹீரோ மாதிரி இருக்கீங்க 

நான் சும்மா சார் , டிரஸ் போட்டா யாருவேணா இப்படி இருக்கலாம் ஆனா உங்ககிட்ட இருக்க மாதிரி ஒரு துணிச்சல் , யார்கிட்டையும் நான் பாத்தது இல்ல . 

ஒரு வேள உங்க வீட்ல வந்து கூப்டா போவீங்களா 

கண்டீப்பா போவன் சார் , ஆனா அவங்களும் வர மாட்டாங்க , நானும் போக மாட்டன். எல்லாருக்கும் ஒரு இது இருக்கும் ,அவங்களே வரட்டும்னு 

அது பேரு ஈகோ , அத முதல விடுங்க 

எல்லார்க்கும் அது இருக்கும் சார் , இருக்கனும் . அது பேரு சுயமரியாதை 

மறுபடியும் அமைதி ஆனன் 

பஸ் ஸ்டான்ட் வந்த்ருச்சு , 

கடைசியா ஒரு கேள்வி , எப்டி இவளோ என்கிட்ட பேசறீங்க ,என் பேரு தவற எதுமே உங்களுக்குத் தெரியாது 

உங்க கிட்ட இப்டி பேசுவன்னு நானே எதிர் பாக்கல , 

ஆனா என் குழந்தைய தூக்கி மடியில வச்சீங்களே , அப்போ தான் பிடிச்சது 

ஏன் சார் எல்லாரும் பண்றது தான 

இல்ல சார் ,என் பையன் நெறைய முறை ஆட்டோல வருவான், சில பேரு அவன பாத்துட்டு முகத்த திருப்பிப் பாங்க , சில பேர் கைல இருக்க எதாவது கொடுத்து ஏதோ பெருசா பண்ண மாதிரி அவன பாப்பாங்க . சக மனுசனா யாரும் பாத்தது இல்ல , ஒன்னு பணம் இருக்கணும் இல்ல அழகா இருக்கணும் , அது தான் இங்க எல்லாத்தையும் தீர்மானிக்குது . 

அப்போ எதுமே பண்ண கூடாதுன்னு சொல்றீங்களா 

ஹெல்ப் பண்லாம் சார் ஆனா வெளில தெரியாத மாதிரி பண்ணும் , நீங்க உதவி பண்ணீங்கன்னு நாங்க சொல்லணும், நீங்களே சொல்லிட்டா எப்படி .இன்னும் படிக்கற பசங்க கூடப் போட்டோ எடுத்து போடறாங்க இங்க அது பண்ணோம் இது பண்ணோம்ன்னு ,அதுக்கு எதுமே செய்யாம இருக்கலாம் 

இதுவரை இந்த மாதிரி யாரும்கிட்டையும் சொன்னது இல்ல , உங்கள பாத்துத் தான் சொல்றன் , உங்கள பாக்க ரொம்பப் பொறமையா இருக்கு , 

ரொம்பப் பெரிய வார்த்தைகள் இதலாம், பாக்கலாம் சார் 
பாப்போம் 

இதான் கடைசியா பேசிக்கிட்டது , நம்பர் வாங்கலையான்னு கேக்கறீங்களா . கேட்டாலும் அவர் கொடுத்துட்டு இருக்க மாட்டாரு . 

அவங்கள திரும்பி பாப்பனான்னு தெர்ல ஆனா அந்த ஒரு பொழுது எனக்கு நெறைய சொல்லிக் கொடுத்ருச்சு. 

பஸ்ல ஏறி உக்காந்தப் பொழுது நெறைய கேள்விகள், 

யாருமே வேணாம்ன்னு , உனக்கு நீ எனக்கு நான் இப்படிக் கூட வாழ முடியுமா ,அந்தக் குழந்தயா பாக்கும் போது ஏன் எனக்கு எங்க அப்பா ஞாபகம் வந்தாரு , இந்த மனுசன நான் எதுக்குச் சந்திக்கணும் , உதவி பண்றதுல கூட இவ்ளோ விஷயம் பாக்கனுமா , இவர பாத்த உடனே அருவருப்பா இருந்தாரு இப்போ ஏன் என் கண்ணுக்கு அழகா தெரியறாரு , கல்யாணம் பண்ண மனசு சொல்லன்னுமா இன்னும் நெறய கேள்விகள் அந்த இரவு முழுவதும்

பதில் கிடைக்காது என்று தெரிந்தும் கேள்வி கேட்பதில் எவ்வளவு சுவாரசியம் 


இந்தக் கதைய அம்மாக்கிட்ட சொன்னன் , அவங்க சொன்னது , 
அவங்க தான் லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க , இத வேற நீ என்கிட்ட சொல்ற . அதே ஊர்ல இருந்து வாழ்ந்து காமிக்கணும் .அப்பா அம்மா விட்டுடு போகுதுங்க அத எப்படி நீ நியாயப் படுத்துற . இந்தப் படத்துல வில்லன ஹீரோவா காமிக்கற மாதிரி இருக்கு நீ சொல்றது 

இத எங்க அக்காக்கிட்ட சொன்னன் , அவ லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டவ , 
அது அப்படித் தான் முருகா , அம்மா அப்பா மேல பாசம் இல்லன்னு சொல்ல முடியாது .ஆனா புடிச்சுப் போச்சுனா பைத்தியம் பிடிச்ச மாதிரி வேற எதையுமே நினைக்கத் தோணாது .அவங்க பண்ணது சரி தான் 

அவங்கள பத்தி நான் என்ன நினைக்கறேன் தெரியுமா ,
இவங்கள மாதிரி தான் எல்லாரும் காதலிப்பாங்கன்னு சொல்ல முடியாது ஆனா இவங்கள மாதிரியும் காதலிக்கறவங்க இருக்காங்க
.அப்படித் தான் இத சொல்லணும்
 அவங்ககிட்ட எனக்குப் பிடிச்ச ஒரே விஷயம் , இந்த மாதிரி யாரு என்ன நினைப்பான்னு எத பத்தியும் கவலை அவங்களுக்கு இல்ல , இதோ இத நீங்க படிக்கற நேரத்துல அவர் எங்கயோ ஆட்டோ ஒட்டிக்கிட்டு இருக்கலாம் , அவங்க பாடம் எடுத்கிட்டு இருக்கலாம் இல்லனா அவங்க மூணு பேரும் சிரிச்சு பேசிக்கிடோ இல்ல அழுதுக்கிட்டோ இருக்கலாம் .ஆனா அவங்க வீட்ல விருந்தாளியாகக் கூட யார்க்கும் இடம் இல்ல 

யாருமே வேணாம்ன்னு வாழ்றது அவளோ சுலபம் இல்ல , ரொம்பப் பொறமைய இருக்கு இப்போ நினச்சா கூட 

இப்போ அவங்க அங்க இருக்காங்களான்னு கேக்கரீங்களா 

ஒரு வேள இருக்கலாம் , இல்ல வேற ஊர்க்குப் போய்ப் புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கலாம் 

பறவைகளால மட்டும் தான் புது இடத்துல இருந்து , அதே வாழ்க்கைய தொடர முடியும் , எனக்கு அவங்க பறவை மாதிரி தான் 
------------------ ---------------------  ------------------------



எப்படிக் காதலிக்கணும் , எப்படி வெற்றி பெறனும் , எப்படிக் கனவு காணனும் ,எப்படிப் புகழ் பெறனும் , எப்படி வேலை செய்யணும் இதலாம் வேணா இந்தப் புக்ஸ் , சினிமா பாத்துத் தெரிஞ்சுக்கலாம் ஆனா எப்படி வாழனும் வாழக் கூடனுனு இந்த மனுசங்கள பாத்துதான் கத்துக்க முடியும் போல 



பக்கங்கள் புரட்டப்படும் ! 







1 Comments

  1. Ella manushanga pinnadiyum oru periya varalaare irukku.. adha yaarum Sollu kodukradhadhu illa,therinjukanum num yaarukkum viruppam illa... You are different bro... Keep doing... Respect people and know more about them....

    ReplyDelete