மதன், ரதி, ஒரு கிங்ஸ் பாக்கெட்

ரொம்ப நாளைக்கு அப்பறம் ஒரு பயணம்,

இந்த பிலைட் புக் பண்ணி மூணாவது நாள் எந்த ஹோட்டல்ல என்ன லஞ்ச் சாப்படணும்னும் டைம்டேபிள் போட்டுட்டு போற பயணங்கள் எப்போதுமே எனக்கானவை அல்ல. கடைசியா ஊருக்கு போக தேவையான அளவுக்கு பணம் வச்சுட்டு மீதி பணம் இருக்கவர பயணப்படுவது தான் என் விருப்பம், வசதி எல்லாமே. அப்படி ஒரு பயணம், இதோ இன்னும் கொஞ்ச நேரத்துல.

இன்னும் 10 நிமிசத்துல ட்ரைன்(train) எதுட்டுருவாங்க.அதுக்குள்ள ஓடிப்போய்  செகண்ட் கிளாஸ் கோச்சில சீட் பிடிக்கனும். நீங்க நினைக்கற மாதிரி அதுல சீட் பிடிக்கறது அவ்ளோ ஈசி இல்ல, கசங்கி நசுங்கி ஒரு வழியா சீட் பிடிச்சு உள்ள உக்காந்தா 5 வது நிமிஷம் ஒரு பொண்ணோ இல்ல ஒரு அம்மாவோ வந்து தம்பி நீங்க நின்னிட்டு வரீங்களான்னு கேப்பாங்க. நீங்க அப்போ எழும்பலனா 4 ரேப் 6 கொலை பண்ண மாதிரி உலகம் உங்கள உத்துப்பாக்கும். Being a male is not so easy.

பாதி படி ஏறுனவாட்டி தான் ஞாபகம் வருது இன்னும் வாட்டர் பாட்டில் வாங்கல, மறுபடியும் கீழ ஓடி போறன்.

அண்ணா,  வாட்டர் பாட்டில் ஒண்ணு கொடுங்க

தம்பி 500க்கு சில்லற இல்ல, வேற ஏதாவது வாங்கிகோ

3 லிட்டில்ஹெர்ட்ஸ் கொடுங்க, அப்பறம் புக்ஸ் ஏதாவது இருக்கா 

இந்த பக்கம் வந்து பாருங்க.

என்னோட புக்ஸ் செலேகசன் எப்போதுமே: கிளி, சீட்டு எடுக்கறது மாதிரி தான், சில சமயம் நல்ல சீட் வரும் பல சமயம் ஏன்டா வாங்குனோம்னு இருக்கும்.

அந்த புக்ஸ் குவியலுக்கு நடுவுல ஒரு புக்,

"அந்தப்புரத்து ராணி"

இன்னுமா இந்த மாதிரி புக்ஸ்லாம் படிக்கிறாங்கன்னா ?

தம்பி விகடன் விட இதான் அதிகமா விக்குது

கடைசியா ராஜேஷ்குமார்வோட 'வெல்வெட் கனவுகள்' எடுத்தாச்சு

சில்லற வாங்கிட்டு திரும்ப ஓடிப் போறன்.

பிளாட்பார்ம்ல ஓடும் போது,

நாலு பொண்ணுக சிரிச்சு பேசிட்டு வராங்க, அதுல ஒரு பொண்ணு கைல என்னமோ இருக்கு. இத காலேஜ் பஷ்ட் இயர்ல நானும் யூஸ் பன்னிருக்கன், EG பேப்பர்ல. பேரு ஞாபகம் வரல. இவ்ளோ மறதியாச்சா நமக்கு.

உன்னோட கடைசி CGPA ஞாபகம் இருக்கான்னு உள்ள இருந்து ஒருத்தன் கேக்கறான். ஞாபகம் இல்லனு எப்படி சொல்ல. அவமானம்

அப்டியே திரும்பி அந்த பொண்ணுங்கள பாக்குறன், ஒரு பொண்ணு தலையில கனகாம்பரம் வச்சிருக்கா, எவ்ளோ நாள் ஆச்சு இந்த பூ பாத்து. ஸ்கூல் படிக்கும் போது வெளில சரஸ்வதி அக்கா விக்கும்.

எனக்கு முன்னாடி என்ன ஓவெர்டேக் பண்ணிட்டு ஒரு பொண்ணு ஓடறா. பாக்க அழகாக இருக்கா. பேசாம அவளோட ட்ரைன்ல ஏறிடலாமா.

இந்த மனசு ரொம்ப மோசமான வில்லன். பேசவும் வைக்கும் அப்பறம் உனக்கு ஏன்டா இந்த வேலைன்னு திட்டவும் வைக்கும்.

நான் எற வேண்டிய ட்ரைன், எனக்காக காத்து இருந்த மாதிரி நான் வந்த உடனே விசில் அடிச்ருச்சு.

எதிர்பாத்ததவிட கூட்டம் கம்மி தான். சீட் புடிச்சு உக்காந்துச்சு.

கொஞ்சநேர பரஸ்பர விசாரிப்புகள்,  ட்ரைன்ல வந்த கொய்யா பழம், மாங்கா துண்டு, வேர்க்கடலை, சூடா ஏலக்காய் டீ, பக்கதுல இருக்க அந்த அண்ணா வாங்கி கொடுத்த அன்னாசி பழம்னு வரிசையா சாப்பிட்டு அப்டியே தூங்கிட்டன்.

விடிகாலம் கிட்டத்தட்ட 5மணிக்கு முழிப்பு. கொஞ்ச நேரம் படியில பயணம், ‘இந்த நிகழ்காலம் இப்படியே தொடராதான்னு’ ராஜா சார் ஒரு ஓரமா காதுக்குள்ள பாடிடுட்டு இருக்காரு. இன்னும் 10 நிமிஷம் நான் இறங்க போற இடம்.

ட்ரைன்ல இறங்கி தேடிப்புடிச்சு தங்க வேண்டிய ஹோட்டல் போய்ட்டு அவசர அவசரமா பிரெஷ் அப் பண்ணிட்டு டீ கடைய தேடி இப்போ போய்கிட்டு இருக்கன்.

இனி இங்க இருக்க இந்த நாலு நாள் முழுக்க முழுக்க எனக்கானது.

கடைசியா ஒரு கடை கண்டுபிடிச்சாச்சு.

அங்க ஒரு போர்டு, "இங்கு உளுந்துகஞ்சி கிடைக்கும், 1 கிளாஸ் 15 ரூபாய்"

எங்க பாட்டி உயிரோட இருக்கவரை பாட்டிவோட அருமையும் புரியல உளுந்துகஞ்சி அருமையும் புரியல. என்னடா குடிக்கும் போது இப்படி தேங்காய் துருவல் வருதேன்னு திட்டுவன். அத வாங்கி ரசிச்சு குடிச்சுட்டு இருக்கும் போது தான் அந்த குரல்.

ஒரு கிங்ஸ் பாக்கெட் கொடுங்க

இது ஆண் குரல் இல்ல , யாரா இருக்கும்ன்னு திரும்பிப் பாக்கறன். அங்க இருந்த மொத்த கூட்டமும் அவள தான் பாக்குது

அவ இப்போ என்ன பாக்கறா.

இப்போ எல்லாரும் எங்க ரெண்டு பேரையும் மாறி மாறி பாக்கறாங்க

குழப்பமா இருக்கு

அட, அவளும் நானும் ஒரே மாதிரி ட்ரெஸ்ஸிங் பண்ணி இருக்கோம்.

பிளாக் ஷர்ட், டார்க் பிரவுன் பேண்ட், வைட் ஷூ,  கருப்பு கூலர்ஸ்- எனக்கு ஆச்சரியமா இருந்தத விட அதிர்ச்சியா இருந்துச்சு.

ரெண்டு நிமிஷம் உத்துப் பாத்துட்டு இப்போ நடக்க ஆரமிக்கறா

இவ கிட்ட போய் பேசுவோமா, ஒரு வேள  திருப்பி அடிச்சுட்டா, யாரு இவ ? எங்க இருந்து வந்து இருக்கா, கைல இன்னும் கிங்ஸ் பாக்கெட் வச்சுட்டு கெத்தா நடந்து போய்ட்டு இருக்காளே. 

சரி என்ன ஆகப் போகுதுனு பேச ஆரம்பிக்கற அந்த செகண்ட்,
ஹலோ உங்க பேரு என்ன?  உங்களுக்கு என்ன மன்மதன்னு நினைப்பா பின்னாடியே வரீங்க

எஸ்சுஸ் மீ,  ஹலோ மிஸ் உங்களுக்கு என்ன பெரிய ரதின்னு நினைப்பா? பின்னாடி வர பசங்களாம் உங்கள தான் பாலோ பண்ராங்கனு நினைக்கிறீங்க

அவ இந்த பதில் எதிர்ப்பாக்காத மாதிரி இருந்தது முகபாவம்

சில நொடி அமைதிக்கு பின் ,

எந்த ஊரு நீங்க எத்தன நாள் வந்துறீக்ங்க

நான் இப்போ தான் , நீங்க ஹனிமூன் வந்தீங்களா,  உங்க ஹபி ரிட்டர்ன் டிக்கெட் வாங்க போய் இருக்கறா

ஏன் ரதி லாம் தனியா வர கூடாதா

ஒரு வேள மதன தேடி வந்திருக்கலாம்

அப்போ மதன் தனியா தான் வந்தாரா

சொல்லிட்டு இருக்கும் போதே நாங்க பிரிய வேண்டிய இடம். ஒரு bye  கூட சொல்லாம அப்டியே நான் வண்டி ஏறி போய்ட்டன் அவளும் .

நான் இப்படி பேசற ஆளு இல்ல ஆனா பேச வச்சது அவளோட attitude.

அவ கூட நடந்த இந்த உரையாடல் நினைக்கும் போது ஒண்ணே ஒன்னு தான் தெளிவா தெரிஞ்ச்சு , அவ குரல்ல ஒரு திமிர் இருக்கு. பொண்ணுகளுக்கு திமிர் அழகானதுன்னு சொல்லுவாங்க, அவளுக்கு அது இன்னும் அழகா இருக்கு.

அடுத்த ரெண்டு நாளுக்கு அவள எங்கயும் பாக்கல , மூணாவது நாள் ஏற்கனவே நாங்க சந்திச்ச இடத்துல இருந்து 20கிலோ மீட்டர் தள்ளி ஒரு டீக்கடையில,

எங்க இருந்தோ வந்த சிகெரட் புகை ரொம்ப உறுத்தலா இருந்துச்சு,  யாருன்னு வெளில போய்ப் பாத்தா ஒரு சுவர்ல சாய்ஞ்சுட்டு அதே கெத்தா நின்னுட்டு இருந்தா.

                                                       



ரெண்டு பேரும் ஒரு சின்ன பார்வை அவ்ளோ தான், டேபிள்ல வந்து உக்காந்தா

ரெண்டு சிப் குடிக்கற வர அமைதி

சரி உங்க உண்மையான பேர சொல்லுங்க, (  அதுல ஒரு ஆர்வம் இருந்துச்சு)

என் நிஜப் பேரே மதன் தான், நீங்க நம்புனாலும் சரி, இல்லனாலும்

ஹாஹா , நிஜமாவ. Proud Myself ன்னு அவளே சொல்லிட்டு அவ ஷர்ட் காலர தொட்டுப்பாத்தா

you are crazy, what’s your name Rathi,

என்னோட பேரு ரதி இல்ல, ஆனா இது நல்லா இருக்கு,  இதுவே இருக்கட்டும்

அந்த பதிலே அவளோட கடந்த காலம் நிகழ்காலம் பத்தி நீ கேக்ககூடான்னு indirect-ah சொல்ற மாதிரி இருந்துசு

நீங்க எப்போ கிளம்பறீங்க, எதுல கிளம்பறீங்க

அவ சொன்ன பதில்கள் எல்லாமே சேர்த்துப் பார்த்தா , அவளும்னு நானும் ஒரே ட்ரைன் ல தான் வந்து இருக்கோம் ஒரே ட்ரைன் ல தந் கிளம்ப போறோம்ன்னு தெரிஞ்சுச்சு அவ கிட்ட அத சொல்லல, வேற ஏதோ நாளும் நேரமும் சொல்றன்.

இனி மீதி இருக்க மூணு நாளும் எங்களோட  தனிப்பட்ட பயணம் முடிச்சுட்டு குறைஞ்சது ஒரு மணி நேரம் செலவழிக்கணும் முடிவு பண்ணோம்.

அடுத்த நாள் காலையில,

ஹில்ஸ்டேஷன்க்கு தனியா வரது ரொம்ப கஷ்டமான விஷயம் , அத விட கஷ்டம் அங்க ஹனி மூன் வந்த ஜோடிங்க உங்கள போட்டோ எடுக்க சொல்றது. பிரீயா போட்டோஷூட் முடிச்சுட்டு, ஹோட்டல வேலை செய்றவங்க கூட விளையாடிட்டு இருக்கன்.

நைட் மழை வந்ததுனு நாளா வெளில எங்கயும் இப்போ போக முடியாது . அப்பறம் சின்ன தூக்கம், இதோ இப்போ அவள பாக்க கிளம்பிட்டேன் .

எனக்காக ஏற்கனவே காத்துட்டு இருக்கா, என்னை பார்த்ததும் அந்த சிகரெட் பத்த வைக்கறா.

அவ புகைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது எனக்கும் முத முறையா அந்த 'புகை' புடிச்சுப் போச்சு.

அவ என்கிட்ட கேட்ட கேள்வி

உனக்கு அரசியல் பிடிக்குமா மதன் ,

புடிக்கும்

நீ பர்ஸ்ட் படிச்ச பொலிடிகல் புக் என்ன

How to change the world

அவ கண்ணுல ஒரு திருப்தி, இவனுக்கு ஏதோ தெரியும் போலன்னு

சரி அதே கேள்வி உனக்கு

A theory of justice

ரொம்ப நேரம் பேசுவோம்ன்னு எதிர்ப்பாக்கல, அப்போ ஆனா எல்லாமே பேசுனோம்

வைகோ ஏன் தேவைன்னு பேசுனோம் , திருமா ஏன் ஜெயிக்க மாட்டாரு, கேப்டன் எங்க சொதப்புன்னாரு,  சசிதரூர், சிதம்பரம் வர பேச்சு வளர்ந்துசு.

கலைஞரமும் எம்ஜிஆரூம் ஜெயாவும் எல்லா பேச்சுக்களிலும் தவிர்க்க முடியாத வார்த்தையாக இருந்தது.

எனக்கு எவளோ தெரியும்னு பாக்கலாம்ன்னு நினச்சா ,உனக்கு எவ்ளோ தெரியலன்னு பாருன்னு அவ புரிய வச்சா.

அந்த மூணு மணி நேரம் போனதே தெர்ல.

ரதி நாளைக்கு நான்  வர முடியாது.

ஏன் ,

ட்ரெக்கிங் போறன் , திரும்பி வர எவ்ளோ நேரம் ஆகும்ன்னு தெரியாது

நான் வரவா

இன்னும் அவ எனக்கு புதிராவே இருக்கா. வான்னு சொல்லவா வேணாம்னு சொல்லவா

சரி வாங்க

காட்டுக்குள்ள அவ கூட போறன் , இதுவரை அவ இந்த மாதிரி போன மாதிரி தெர்ல ஆனா அவளோட WILL POWER  ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

மதன் இது என்ன, எவ்ளோ ட்ரிப் போயிருக்கீங்க, அப்படி இப்படின்னு அவளோட கேள்விகள் எல்லாமே குழந்தைத்தனமா இருக்கு

கொஞ்ச நேரத்துல அருவி,

அப்டியே கண் அசந்து தூங்கிட்டோம் அந்த இதமான காற்று , அருவி சத்தம்  பறவைங்க ஒலின்னு ரம்மியமான நேரம் வாழ்க்கையில.

முழிக்கும் போது , அவ அங்க மீன் புடிச்சுட்டு இருக்கா, எப்படி அந்த ராட்டி  செய்ஞ்சான்னு தெர்ல,

மீன் புடுச்சுட்டு வந்து , இத சுட்டுக்கொடு மதன்ன்னு அவளோ உரிமையை கேக்கறாரா

யாரா இவன்னு அடிக்கடி என்ன யோசிக்க வச்சுட்டே இருக்கா
நெருப்பு மூட்டி மீன் சுட்டுக் கொடுத்தன் , அதுல உப்பு காரம் எதுமே இருக்காது வெறும் அந்த மீனோட சுவை 

நெறய பேர்க்கு அது பிடிக்காது , அவளுக்கும் அது பிடிக்கலைனு அவளோட கண்ணு சொன்னுச்சு

அப்படியே திரும்ப நடை , பேச்சு இப்போ திருமணங்கள் பத்தி

கல்யாணம் எதுக்கு பண்றீங்கன்னு ஆரம்பிச்சு, அவ கேட்ட எந்த கேள்விக்கும் என்னால பதில் சொல்ல முடியல ஆனா இந்த கேள்விகளுக்கும் அவளுக்கும் ஏதோ சம்பந்தம்  இருக்குனு மட்டும் தெரிஞ்சுச்சு.

நாளைக்கு நான் வேற ஒரு இடத்துக்கு போறன், நாம மீட் பண்ண முடியாதுன்னு மதன்

சரி ஒகே.

நானும் வரட்டுமான்னு கேக்கமாட்டியா மதன்

இல்ல கேக்க மாட்டன்

சரி அப்போ நைட் சினிமாக்கு போலமா

நீ எப்போ திரும்பி வருவ

நைட் 11 ஆகும்

அதுக்கு மேல சினிமாக்கா

ஆமா, அடுத்த நாள் தான் நான் கிளம்பணுமே

எனக்கும் இப்போ தான் ஞாபகம் வருது. நானும் கிளம்பனும்ல

சரி ஒகே , போலாம்

எப்படி

ஏதாவது ஏற்பாடு பண்றன்   

அடுத்த நாள்  பகல் முழுக்க எங்கயோ சுத்திப் பாத்துட்டு 11 மணிக்கு அங்க பைக்ல போய்ட்டேன்

பைக் கிடைக்க நான் ரொம்ப கஷ்ட படல , ரூம் பாய் கிட்ட சிரிச்சு பேசுனது ஹெல்ப் பண்ணுச்சு , அவனோட பைக் தான் இது .

போற வழில படங்கள் பத்தி பேச ஆரம்பிச்சோம்.
நோலன்ல இருந்து நம்ம ஊரு விக்கிரமன் வர போச்சு.

அவளுக்கும் எனக்கும் இதுல நெறய கருத்து வேறுபாடு, ஆனா Shawshank redemption எந்த அளவுக்கு பேசுனோமோ அதே அளவுக்கு Sakalakala samanthi படத்தை பத்தியும் பேசுனோம்.

நாங்க ரெண்டு பேரும் ஒத்து போன ஒரே விஷயம் சிம்ரன். அவளுக்கு இணை இன்னும் யாருமே வரல. உடல், உருவம், நடிப்பு, நளினம், நடனம்ன்னு அவளுக்கான இடம் இன்னும் காலியாவே இருக்கு சினிமாவுல.

கடைசியா தியேட்டர்க்கு வந்தாச்சு , மொழி புரியாத ஏதோ ஒரு பஞ்சாபி படம் , அது ஒரு காதல் கதைன்னு மட்டும் ஒரு வழியா படம் முடியும் போது கண்டுபிடிச்சன்.

படம் முடிச்சு வெளில வரும் போது இந்த போலீஸ்காரங்க , எங்களை விசாரிச்சாங்க

ஒரு வழியா புரிய வச்சு கிளம்பும் போது அந்த போலீஸ்காரர் ரதிய ஒரு மாதிரி பாக்கறான், சரி நீ வா நாம போலாம் ரதின்னு சொல்லும் போது அவ கிட்ட இருந்து சத்தமா அந்த குரல்

எதுக்கு அப்படி பார்க்கிறீங்கன்னு அதுல இருந்த கோவம் யாருக்குமே பயமா தான் இருக்கும்

அவக்கிட்ட ஒரு துணிச்சல் இருக்கு , என்ன எவன் என்னா பண்ணிட முடியும்ன். அப்படியே எது நடந்தாலும் உலகம் என்ன இதோட முடிஞ்சுரும்மான்னு அசாத்திய தெம்பு.

வண்டி எடுத்து கிளம்பும் போது, அவ

மதன் ?

தெரியும் அவ என்ன சொல்ல போறான்னு, இந்த ஆம்பிளைங்க எல்லாருமே இப்படித்தான்னு சொல்லுவா, வேற என்ன

நல்ல வேள, எல்லா ஆம்பிளைங்களும் இவனா மாதிரி இல்ல மதன்

அவ அப்படி சொன்னது, நீ அப்படி இல்ல மதன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு.

அந்த நிலவு பாத்துட்டே வரன் ,

என்ன மதன் நிலவ பாத்துட்டே வரீங்க லவ் பண்றீங்களா

எனக்கு லவ்லாம் பண்ண வாரதுங்க

அப்போ கவிதை

அதுவும் தான்

சும்மா ட்ரை பண்ணுங்க , உங்களுக்கு 60 செகண்ட் டைம் அவளோ தான்

ஒரு 30 செகண்ட்க்கு அப்பறம் ,


கடலும், கடற்கரையும் அதோடு ஒட்டி உறவாடும் இந்த நிலவும்

அவளின் மிகப்பிடித்தமான தேர்வு ;

இந்த மூன்றுக்கும் அவளைப் பற்றித் தெரிய எந்த வாய்ப்பும் இல்லை -

அவளுக்கும் என்னைப் பற்றி..!


இதுக்கு பேரு தான் கவிதையா

அதான் சொன்னன்ல எனக்கு வராதுன்னு

அந்த பொண்ணுக்கிட்ட சொல்லிட்டயா , எத்தனை வருசமா பாக்கற

3 வருசமா

அப்போ சொல்லாத

ஏன்

சொல்லாமலே கடந்து போய்டு , இல்லனா வருத்தப்படுவ . உனக்குன்னு ஒருத்தி வருவா . இவள விட்று

திரும்ப ஏதும் நாங்க பேசிக்கல

அவளோட ஹோட்டல் வந்துச்சு, உள்ள போறதுக்கு முன்னாடி

மணி இப்போ எத்தன மதன்

3.30

So , ஒரு பையன் கூட ஒரு பொண்ணு இந்த நேரத்துக்கு இருக்குமுன்னா ஒன்னு lovera  இருக்கணும் இல்ல itema இருக்கணும்ல மதன்

திரும்ப இந்த கேள்விக்கு பதில் இல்ல, அவளும் பதில் எதிர் பார்க்காத மாதிரி உள்ள போய்ட்டா

நாளைக்கு அவளை ட்ரைன்ல விட போனும், நானும் அப்டியே கிளம்பிடணும்

அடுத்த நாள் காலையில ,

இதோ இப்போ அவள விட ஸ்டேஷன் வந்துட்டேன் , என்னனு வாங்கி கொடுக்கன்னு தெர்ல 

அப்டி இப்டினு யோசிச்சு கிங்ஸ் பாக்கெட் வாங்கிட்டு வந்து கொடுத்தேன்

ஹாஹா , என்ன மதன் சிகரெட் பாக்கெட்லாம்

உங்களுக்கு தான்

இன் எனக்கு இது தேவைப்படாது  அதான் ஊருக்கு போறனே. 

அப்புறம் மதன்,  நீ இங்க பாத்த எதுமே நான் இல்ல

தெரியும்,  ஒன்னு சொல்லட்டுமா உன்னோட உண்மையான பேரு தெரியாது ஆனா இந்த ரதின்ற பேரு உனக்கு சரியா இருக்கு.

அதே மாதிரி உன்ன சொல்லுவன்னு நினைக்காதீங்க  மன்மதன் ....சாரி  மதன் 

நீ நெறய பொய் சொல்லிருக்க அதுல இதுவும் ஒன்னு அவ்ளோ தான் 

You are so smart

I Know Right

இதுவர நான் கேட்ட எந்த கேள்விக்கும் நீ பதில் சொன்னது இல்ல இப்போ கடைசியா ஒரு கேள்வி கேக்கவா

கேளு

அன்பு, பாசம், தாய்மை, நட்பு, காதல், இச்சை, காமம், கலவி இந்த எதுமே இல்லாம ஒரு பெண்ணோட பழக ஏதாவது வாய்ப்பு இருக்கா மதன்… ?

யோசிக்கும் போதே

இல்ல மதன் , நீ சொல்லாத.

Bye, Thanks for the time.

அவளோ தான் , இப்போ நான் என்னோட சீட்ல ஏறி உக்காந்துடன். இன்னும் ஒரு 20 அடி போன அவ உண்மையான பேரு , யாரு அவ எங்க இருந்து வந்து இருக்கான்னு தெரிஞ்சதும் . அவ கிட்ட இன்னும் ஒரு வார்த்தை நான் பேசுனா அவளோட இன்னும் உறவு தொடர ஆரம்பிக்கும் .ஆனா இதல்லாம் வேணாம்ம்னு தோணுது

ரதி-  பேண்ட் ஷர்ட் போட்டுட்டு , ஷர்ட் ல ஒரு பட்டன் கழட்டி விட்டுட்டு கைல ஒரு சிகரெட் வோட ஒரு கேரக்ட்டர் எப்படி எனக்கு புடிச்சு போச்சுன்னு யோசிக்கிறேன்.எனக்கு நல்லா தெரியும்,  இந்த நாலு நாட்கள் அவகிட்ட நான் பாத்தது அவளோட சுபாவம் இல்ல ஆனா அவ வாழணும்னு ஆசைப்படற வாழ்க்கை.

இந்த ஒரு மூலையில நான் , இன்னொரு பக்கம் அவ எங்களோட இந்த பயணம் முடிச்சுருச்சு . எங்களை சுத்தி இவ்ளோ மனுசங்க .

இந்த ட்ரைன்ல இங்க இருக்க எல்லாருக்குமே ஒரு கதை இருக்கும்ல . இந்த நேரத்துக்கு எவ்ளோ ட்ரைன் ஓடிட்டு இருக்கும் எவ்ளோ பஸ் ஓடிட்டு இருக்கும் அதுல இருக்க எல்லாருக்குமே ஒரு கதை இருக்கும்ல .

எனக்கு உறவுகளை சம்பாதிப்பதை விட வெறும் மனிதர்களை மட்டும் சம்பாதிக்க தோணுது,  எந்தவிட  நிர்பந்தம் இல்லாம . ரதிய இனி சந்திச்சா கூட இந்த நாலு நாள் கிடைச்ச மாதிரி இனி கிடைக்க வாய்ப்பு இல்ல. இத நினச்சு பாக்கறது தான் இனிமே சுகம். அவ அவளோட லைப் வாழட்டும் அவ லைப்க்குள்ள எதுக்கு  என்ன உள்ள தள்ளனும்.

எல்லாரோட புக்லையும் அதிக பட்சம் ரெண்டு அத்தியாத்துல என்னோட பேரு  வந்தா போதும் , அவங்க புக் முழுசா என் பேரு தான் வரணும்னு இருந்த பேராசை போச்சு.

அதே மாதிரி எனக்குன்னு ஒரு புக் இருக்கு, அத தப்பு தப்பாவாச்சு எழுதி முடிக்கணும் , கடைசியா பேரு இப்படி வைக்கணும், ” பிழைகளுடன் கூடிய முழுப்புத்தகம்"

நான் அப்டியே கண் அசரும் போது மணி 12 இருக்கும் , சின்னதா ஒரு நினைவலைகள்  சந்திச்ச எல்லா பொண்ணுக முகமும் வந்து வந்து போகுது .அவங்க எல்லாரயும் பார்க்க முடியுமான்னு தெர்ல ஆனா திரும்ப பார்த்த கேக்க ஒரு கேள்வி இருக்கு .

அன்பு, பாசம், தாய்மை, நட்பு, காதல், இச்சை, காமம், கலவி இந்த எதுமே இல்லாம ஒரு பெண்ணோட பழக ஏதாவது வாய்ப்பு இருக்கா?

கேள்விக்கான விடை தேடிகிட்டே இருக்க போறன், இதோ ஸ்டேஷன் வந்திருச்சு , இனி ரதி எப்போவது ஞாபகம் வர போற.. ஏதாவது ஒரு நாள் நேர்ல வருவா...



                                பக்கங்கள் புரட்டப்படும்



0 Comments