கைப்பேசி என் காதலியானாள்


என் தூக்கத்தின் ஆழம் உனக்கு தெரியும் - என் 
தூக்கமின்மையின் அவஸ்தை உனக்கு புரியும்;

பத்து அடி தொலைவில் இருந்தாலும்
நீ சிணுங்கும் ஒலி எனக்கு மட்டுமே கேட்கும் என் குழந்தை நீ!
தொலைந்து போன நண்பர்களுக்கான வரலாறு நீ !

என்னுடைய முதல் ரசிகனே
நபர்கள் எல்லாம் நண்பர்கள் ஆன போதும் 
சரி நண்பர்கள் வெறும் நம்பர்கள் 
ஆன போதும் சரி -  நீ மட்டும் 
என்னை விட்டு நீங்காமல் இருக்கும் உயிர்த்தோழனே !

தொழிநுட்பம்
என் காலடியில் இல்லாமல் உள்ளங்கையில்
தந்த இரட்சகனே!
என் அந்தரங்கத்தின் பாதுகவலனே - எனக்கு மட்டுமே
தெரிந்த ரகசியம் என்று நினைக்கும் போது
ஒலி எழுப்பி எனக்கும் தெரியும் என
ஏளனச் சிரிப்பு சிரிக்கும் கள்வனே!

சில ஆயிரம் கல் தொலைவில் 
இருந்தாலும் உறவுகளை உயிர்ப்புடன் 
வைத்திருக்கும் மந்திரக்கோலே!
காந்திக்கு கிடைத்த கைத்தடி போல 
நான் எங்கு சென்றாலும் என்னை 
தொற்றி வரும் ஒட்டுண்ணியே !

முதல் முறை உன்னைத் தொட்ட போது- 
நீ கொடுத்த கிளர்ச்சி
மாறாமல் தொடர்ந்து இன்று வரை 
ஓய்வு இன்றி உழைக்கும்
என் மறு இதயமே !!
எனக்கு வந்த அழைப்புகளுக்கு,
நான் பேசிய வார்த்தைகளுக்கு
ஆதாரமும் நீதான் அச்சாரமும் நீதான்;

நினைக்க, சுவைக்க, மறக்க, மலைக்க, 
வியக்க, வெறுக்க, எதிர்க்க எல்லாம் 
என்னால் முடிகிறது, காரணம் நீ!
அவமானங்கள், தோல்விகள், இலட்சியங்கள், 
வெறுக்கும் நபர்கள், பிடித்தது, பிடிக்காதது 
எல்லாமே என்னை விட நீ நன்றாக 
தெரிந்து வைத்துளாய்!

பேச நினைக்கும் வார்த்தைகளை
அனிச்சையாக புரிந்து கொள்ளும் நீ -
பேச மறுக்கும் நபர்களை
மட்டும் அடையாளம் காண மறுப்பது ஏனோ ? 

உள்ளொன்று வைத்து புறமொன்று 
பேச தெரியாமல் என்னைப் போலவே
பல நேரங்களில் தெளிந்த நீரோடையகாவும் 
சில நேரங்களில் குழம்பிய குட்டையாகவும் உள்ளாய்?
இதற்கு பேர் தான் சிநேகித சுகவசமோ!
எனக்கான 'அந்த அவள்' தேடல் இன்னமும்
நடந்து கொண்டிருக்கிறது – காரணம் நீ
வேடிக்கை என்னவென்றால்
இங்கே தேடுபவனும் நீயே,
தேடல் பொருளும் நீயே, தேடலும் நீயே.

என் முதல் காதலியே 
இரண்டாம் மூளையே 
மூன்றாம் கையே
நான்காம் ஆண்டு 
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.



1 Comments

  1. என்னுடைய அவமானங்கள் , தோல்விகள், இலட்சியங்கள் ,நான் வெறுக்கும் நபர்கள் , பிடித்தது , பிடிக்காதது எல்லாமே என்னை விட நீ நன்றாக தெரிந்து வைத்துளாய் :பேச நினைக்கும் வார்த்தைகளை அனிச்சையாக
    புரிந்து கொள்ளும் நீ - பேச மறுக்கும் நபர்களை
    மட்டும் அடையாளம் காண மறுப்பது ஏனோ ?உள்ளொன்று வைத்து புறமொன்று பேச தெரியாமல் என்னைப் போலவே

    பல நேரங்களில் தெளிந்த நீரோடையகாவும் சில நேரங்களில் குழம்பிய குட்டையாகவும் உள்ளாய் –இதற்கு பேர் தான் சிநேகித சுகவசமோ ?


    Liked it

    ReplyDelete